Published : 25 Jul 2024 02:09 PM
Last Updated : 25 Jul 2024 02:09 PM

நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?

மஞ்சூர்: முதுமலை புலிகள் காப்பகத்தை அச்சுறுத்தி வரும் பார்த்தீனியம் மற்றும் லேண்டானா களைச் செடிகள், தற்போது நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் பரவியுள்ளதால், வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.

இந்த தாவரம் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. உடல் மீது படும்போது ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடியின் விதைகள் காற்றில் பரவி செழித்து வளர்கின்றன. இந்த செடி வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள்கூட வளர்வதில்லை. இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் பாலில் கசப்பு தன்மை உண்டாகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அபரிமிதமாக காணப்பட்ட இந்த செடிகள், தற்போது மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் பரவியுள்ளன.

இதேபோல், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழகு தாவரமாக வளர்க்கப்பட்ட லேண்டானா எனப்படும் உண்ணிச் செடிகள், நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட குந்தா, குன்னூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள், சாலையோர பகுதிகளை அதிகளவு ஆக்கிரமித்துள்ளன. இவற்றால் தாவர உண்ணிகளான மான், காட்டெருமை, யானை போன்றவற்றுக்கும், வளர்ப்பு கால்நடைகளுக்கும் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் பெய்த மழை காரணமாக பார்த்தீனியம், லேண்டானா ஆகியவை செழித்து வளர்ந்துள்ளன. குறிப்பாக உண்ணிச்செடிகளில் உன்னி பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன. இவை காய்ந்து நிலத்தில் விழும்போது, மீண்டும் புதிதாக செடி முளைக்கக்கூடிய நிலையும் உள்ளது. உதகை - மஞ்சூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள பாலகொலா பகுதியில் அதிகளவில் வளர்ந்துள்ளன.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் கூறும்போது, ‘‘இந்த களைச்செடிகள், கடந்த 10 ஆண்டுகளாகதான் வளர தொடங்கியுள்ளன. வேகமாக பரவி வருவதால், மேய்ச்சல் நிலப்பரப்பு குறைகிறது. இதனால், கால்நடைகளுக்கான தீவனம் குறைகிறது. மேலும், தேயிலை தோட்டங்களிலும் வளர்வதால், தேயிலை செடிகளும் பாதிப்படைகின்றன. எனவே, லேண்டானா மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சோலைகள் மீட்பு சூழலியல் வல்லுநர் வசந்த் பாஸ்கோ கூறும்போது, ‘‘உண்ணிச் செடிகள் கடந்த 5 ஆண்டுகளாக தான் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் பரவ தொடங்கியுள்ளன. குறிப்பாக, கடந்த ஓராண்டாக இவற்றின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதற்கு, உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் தட்ப, வெப்ப நிலை அதிகரித்ததும் ஒரு காரணம். இந்த செடிகள் சாலையோரங்கள் மற்றும் பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களில் வளர்ந்துள்ளதால், தற்போதைக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. இவை, குந்தா பகுதிகளிலுள்ள சோலைகளை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சோலைகளை ஆக்கிரமித்தால் வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும்’’ என்றார். இந்நிலையில், களைச்செடிகளை அகற்ற போதுமான நிதி இல்லாமல் வனத்துறை தவிக்கிறது. வனத்துறை மூலமாக அந்நிய தாவரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு போதுமான நிதி இல்லாததால், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள கற்பூரம், சீகை மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்குதான் வனத்துறை கவனம் செலுத்தி வருகிறது. முதுமலையை தவிர பிற இடங்களில் பார்த்தீனியம், உண்ணிச்செடிகளை அகற்றும் பணி நடைபெறவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘குந்தா வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் லேண்டானா செடி அதிகளவு வளர்ந்துள்ளது. சாலையோரங்கள், வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிகம் காணப்படுகிறது. வனப்பகுதிகளுக்குள்ளும் பரவ தொடங்கியுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x