Published : 25 Jul 2024 05:30 PM
Last Updated : 25 Jul 2024 05:30 PM

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

ராஷ்ட்ரபதி மாளிகை அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்து முர்மு பாடம் நடத்தினார். அப்போது, “எனது சிறிய கிராமத்தில் இருந்து நான் முதல்முறை டெல்லி வந்தபோது அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். டெல்லியின் காற்று மாசு அந்த அளவு மோசம். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க, நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீரை வீணாக்குவதைக் குறைப்பதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7-ம் வகுப்பு படிக்கும் வரை நான் எனது கிராமத்தில் இருந்தேன். அப்போது கேஸ் அடுப்பு எல்லாம் கிடையாது. விறகு அடுப்பு மட்டுமே. அதற்காக காடுகளுக்குச் சென்று என் தந்தை விறகு எடுத்துவருவார். சில சமயம் காய்ந்த மரங்களில் இருந்து எளிதாக விறகு கிடைத்துவிடும். கிடைக்காத சமயங்களில் தேவைக்கேற்ப காய்ந்த மரத்தை வெட்டி எடுக்க வேண்டி வரும். ஒவ்வொரு முறையும் மரங்களை வெட்டும் முன், மரத்தின் முன் மண்டியிட்டு என் தந்தை வணங்குவார்.

இந்தச் சடங்கு முறை பற்றி என் தந்தையிடம் கேட்டபோது, ‘மரங்களை எங்களின் மூதாதையர்கள் கருதி, அவற்றின் சேவைக்காக நன்றி தெரிவிக்கும்விதமாகவும், மரத்தை வெட்ட வேண்டிய அவசியத்தையும் கூறி மன்னிப்பு கேட்கவும் அவ்வாறு சடங்கு செய்கிறேன்’ என்று தந்தை கூறுவார். மரங்களுக்கு மட்டுமல்ல, பூமிக்கும் அதே மரியாதையை எனது தந்தை கடைபிடித்தார். அவர் மண்ணைத் தோண்டி வேலை செய்வதற்கு முன்னதாக, பூமியை தொட்டு வணங்குவார். என் தந்தை எப்போதும் கூறுவது, பூமி மனிதகுலத்திற்கு ஒரு தாய் போன்றது, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது என்பதே.

பூமியானது எண்ணற்ற உயிரினங்களால் நிரம்பியுள்ளது. ஆனால், அவற்றின் வாழ்விடங்களுக்கு மனிதர்களின் செயல்கள் இடையூறு தருகின்றன. எனவே, எல்லா உயிர்களின் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், பூமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். மனிதர்கள் 200 மரங்களை வெட்டினால், அதற்கு பதிலாக குறைந்தது 5,000 மரங்களையாவது நட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அது வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இறுதியில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் உண்டாகும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x