Published : 25 Jul 2024 04:10 PM
Last Updated : 25 Jul 2024 04:10 PM

சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!

சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் விளையாடும் நீர் நாய்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கோயில் குளத்தில் நீர் நாய்கள் உள்ளதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது மற்றும் கிராமத்தினர் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை வனச் சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்று அங்கு வந்து சிவன் கோயில் குளத்தை கண்காணித்தனர்.

அப்போது, குளத்தில் இருந்தது நீர் நாய் என்பது தெரிய வந்தது. அவை குளத்தில் துள்ளி விளையாடியதுடன், அவ்வப்போது கரைக்கு வந்தன. மக்கள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக குளத்துக்குள் சென்று நீர் நாய்கள் பதுங்கி கொண்டன. இதுதொடர்பாக வனச்சரக அலுவலர் சந்திரசேகர் கூறியது: நீர் நாய்கள் நீர்நிலைகளில் வாழும் உயிரினம். இது காவிரி ஆற்றுக்கரைகளில் இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போது இப்பகுதிக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. நீர் நாய்கள் மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இவற்றால் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. இருந்தபோதிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்களும் அவற்றுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x