Last Updated : 26 May, 2018 11:41 AM

 

Published : 26 May 2018 11:41 AM
Last Updated : 26 May 2018 11:41 AM

நெல் நட்டேன்; நல்வாழ்வு பெற்றேன் - புதிய தலைமுறை விவசாயியின் அனுபவம்

 

“மா

ப்பிள்ளை சம்பா, காட்டு யானம், பால்குடவாழை, சின்னார்னு மொத்தம் ஆறு பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டேன். எல்லாமே நல்லா வந்திருக்கு. நாளைக்கு கும்பகோணத்துக்கு கைக்குத்தல் அரிசியாக்க எடுத்திட்டுப் போறோம்...” உற்சாகமாகப் பேசுகிறார் சுசீந்தர். 32 வயதே ஆகும் இளம் தலைமுறை உழவரான இவர், பாரம்பரிய நெல் ரகங்களை கண்டடைவது, அவற்றை பயிரிடுவது, விதைகளைப் பரப்புவது ஆகிய வேலைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

திருப்பம் தந்த தேசியக்கொடி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான முருகவேலின் மகன் சுசீந்தர். கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு, திருச்சியில் காய்கனி சிற்பம் செதுக்குதல் பயிற்சியாளராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவருடன் நம்மாழ்வார் நினைவேந்தலுக்காக 'வானகம்' அமைப்புக்குச் சென்றுவந்தது அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்டது. “பி.டி. மரபணு மாற்றுப் பருத்தியில் தேசியகொடி நெய்து பயன்படுத்துவது, நாம் பெற்ற சுதந்திரத்துக்கு அவமானம்” என்று ஒரு மூத்த விவசாயி சொன்னது என்னை யோசிக்க வச்சது.

நாட்டுப் பருத்தியை விருத்தாசலத்தில் இருக்கும் எங்கள் சொந்த நிலத்தில் விதைக்க முடிவு செய்தேன். அதைக் கேட்டு அப்பா சிரிச்சார். மகனே நம்ம வயல்ல நெல் மட்டும்தான் விளையும்னார். உடனே நெல்லில் என்னென்ன பாரம்பரிய ரகங்கள் இருக்குன்னு விசாரிக்க ஆரம்பிச்சேன்” உற்சாகத்துடன் தனது வாழ்க்கையின் திருப்புமுனையை விவரிக்கிறார் சுசீந்தர்.

தாக்குப்பிடிக்கும் நாட்டு ரகங்கள்

அப்படித் தேடி அவர் பயிரிட்டதுதான் மாப்பிள்ளை சம்பா நெல் ரகம். ஏரிப் பாசனம் கொண்ட குடும்ப வயலான நான்கு ஏக்கரில் அரை ஏக்கர் மட்டுமே பரிசோதனை முறையில் விளைவிக்கப்பட்ட மாப்பிள்ளைச் சம்பா, சுசீந்தரை ஏமாற்றவில்லை. அறுவடையான ஒன்பது மூட்டை நெல்லில் அவல், கைக்குத்தல் அரிசியாக்கி விற்றது போக எஞ்சியதை வீட்டுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டார்.

கணிசமான நெல்லை பண்டமாற்றாக முன்னோடி பாரம்பரிய உழவர்களிடம் கொடுத்து, மற்ற நாட்டு ரகங்களின் விதைநெல்லைப் பெற்றார். அவற்றைப் பரிசோதனை முறையில் பயிரிட்டதுடன், தொடர்ந்து குறுவைப் பட்டத்தில் பூங்கார், கேரள ரகமான நவராவை பயிரிட்டார்.

“நாட்டு நெல் ரகங்களை பயிரிட்டதில் அவை தந்த விளைச்சலைவிட, வெள்ளமானாலும் வறட்சியானாலும் ஈடுகொடுத்து அவை வளர்ந்த விதம் எனக்கு ஆச்சரியம் தந்தது. மாப்பிள்ளைச் சம்பா அறுவடையின்போது 4 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்தது. சுமார் 10 நாட்களுக்கு கதிர்கள் தண்ணீரிலேயே கிடந்தன. பக்கத்து வயல்களில் இப்படி ஊறிய கதிர்கள் முளைத்துவிட்டன என்று விவசாயிகள் புலம்ப, என்னுடைய வயலில் கதிர்கள் சேதமின்றி பிழைத்தன. அதுபோலவே வறட்சிக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையான போதும் நாட்டு ரகங்களே தாக்குப்பிடிக்கவும் செய்தன” என்கிறார் சுசீந்தர்.

விதை நெல் பரப்புதல்

தந்தையின் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு சிவப்பரிசி உணவு நிவாரணம் தரவே, அதுவரை தயக்கம் காட்டிய குடும்பத்தின் ஆதரவும் கிடைத்த மகிழ்ச்சியுடன் முழுநேர உழவர் ஆனார் சுசீந்தர். சன்னமாக இருக்கும் கருடன் சம்பா, மருத்துவ குணங்கள் நிறைந்த பால்குடவாழை, கத்தரிப்பூ நிறத்தில் பாஸ்மதியைப் போல நீளமாக இருக்கும் சின்னார் போன்றவற்றை பயிரிட்டார். அத்துடன் அவற்றின் விதைநெல்லை சேகரித்து, இயற்கை விவசாயிகளைத் தேடிப்போய் பகிர்ந்து வருகிறார்.

ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்

”வேளாண் பல்கலைக்கழகங்கள் பரிந்துரைக்கும் நெல் ரகங்கள், அவற்றை விளைவிக்கும் முறைகள், நெல்லைத் தாக்கும் பூச்சிகள், வல்லுநர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றை அந்தப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். நாட்டு ரகங்களின் வளர்ப்பதுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தும், வாட்ஸ்அப் வாயிலாக முன்னோடி விவசாயிகள், பூச்சியியல் அதிகாரிகள் ஆலோசனை பெற்றும் எனது வயலின் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்துகிறேன்.

பயிர் ஊட்டத்துக்கான பழக்கரைசலை தேவைக்கும் அதிகமாகவே தயாரித்து வைத்திருப்பேன். சக விவசாயிகளிடம் அவற்றை வழங்கி பதிலுக்கு பஞ்ச கவ்யம், மீன் அமிலம் உள்ளிட்டவற்றை பெற்றுப் பயன்படுத்துவேன். பயிரிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இதுவரை என்னை ஏமாற்றவில்லை. குடும்பத் தேவை போக கணிசமான லாபம் தந்ததுடன், விதைநெல் பரப்புவதன் மூலம் ஏராளமான விவசாயிகளின் அறிமுகத்தையும் இது எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

இயற்கை விவசாயிகள் சிறுபான்மையாக இருப்பதால், ஒருங்கிணைந்து செயல்படுவதில் தடுமாற்றம் இருந்தது. என்னைப் போன்ற இளம் விவசாயிகள் நவீன ஊடகங்களின் வாயிலாகவும் புதிதாகப் படிப்பதன் மூலமும், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமும் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறோம். கூடிய விரைவில் தமிழகத்தின் அழியும் நிலையில் இருக்கும் நாட்டு நெல் ரகங்களை மீட்டு, பரவலாக்க என்னால் முடிந்ததை செய்யப் போகிறேன்” என்கிறார் தீர்க்கமாக.

வயலில் நிறையும் பூச்சிகள்

சமையல் கலை பயின்று, காய்கனி சிற்பக்கலையில் பணிபுரிந்து தற்போது மரபு சார்ந்த விவசாயியாக பரிணமித்திருக்கும் இந்த இளைஞரின் சமீபத்திய ஆர்வம், பூச்சிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாததால் அவரது வயல் ஏராளமான பறவைகள், நன்மை செய்யும் பூச்சிகளால் நிரம்பி இருக்கிறது. நாளொரு பூச்சி, பறவைகளுடன் செல்ஃபி எடுத்து முகநூல், வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்துகொள்வதுடன், அனைவரும் இயற்கைக்கு திரும்புவோம் என்று பிரச்சாரமும் செய்துவருகிறார் சுசீந்தர்.

விவசாயி சுசீந்தர் தொடர்புக்கு: 99526 37722

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x