Last Updated : 18 Jul, 2024 04:58 PM

 

Published : 18 Jul 2024 04:58 PM
Last Updated : 18 Jul 2024 04:58 PM

‘கோனோகார்பஸ்’ மரங்களை தடை செய்ய எழும் கோரிக்கை - காரணம் என்ன?

தூத்துக்குடியில் தனியார் நிறுவன வளாகத்தில் செழித்து வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கும் கோனோகார்பஸ் மரங்கள்.

தூத்துக்குடி: சுற்றுச்சூழல், மனித உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ‘கோனோகார்பஸ்' மரங்களை தடை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில்அண்மை காலமாக சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள், தனியார்நிறுவன வளாகங்கள், கல்விநிறுவன வளாகங்களில் 'கோனோகார்பஸ்' (Conocarpus)என்றமரம் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. கூம்பு வடிவில் பசுமையாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும் வெளிநாட்டை சேர்ந்த இம்மரம், சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்துக்கும் பல்வேறு கேடுகளை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக இந்தியாவில் சில இடங்களில் இந்த மரங்களை வளர்ப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் கோனோகார்பஸ் மரங்களை தடை செய்யவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எஸ்.ஜே.கென்னடி கூறியதாவது: கோனோகார்பஸ் (Conocarpus) என்ற மரம் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது அதிக ஆபத்தைஏற்படுத்தக் கூடிய மரம். தற்போது தமிழகத்தில் வெகுவாக இந்த மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட பூங்காக்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்த மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

ஒவ்வாமையை உருவாக்கும்: இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது, இந்த மரத்தின் இலையை ஆடு, மாடுகள் உண்ணாது, தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது, அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய மரம் என்ற அடிப்படையில் அரபு நாடுகளில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரங்கள், தற்போதுஅங்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் இம்மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மரத்தின் மூலமாக ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மரத்தின் பூவில் இருந்து வெளியே வரும் மகரந்ததூள் காற்றில் பரவி, மனிதர்கள் சுவாசிக்கும் போது உள்ளே சென்று பல விளைவுகளை ஏற்படுத்தும், புற்றுநோயை கூட உண்டாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு கேடு: மேலும், சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சக்கூடியது இந்த மரம் என்று அறியப்படுகிறது. இப்படிப்பட்ட மரங்களை நாம் ஏன் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து, பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒரு காலத்தில் இப்படித்தான் கருவேல மரங்களை நாடு முழுவதும் பரப்பினோம். ஆனால் இன்று கருவேல மரங்களை அழிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

நாட்டு மரங்கள்: நம்முடைய பாரம்பரிய நாட்டுமரங்களான வேம்பு, பூவரசு, அரசு போன்ற மரங்களை விட சிறந்த மரங்கள் இல்லை. இந்த மரங்கள் சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிக்கக்கூடியவை. அவற்றை விட்டு விட்டு அழகுக்காக, ஆடம்பரத்துக்காக ஏன் இது போன்ற ஆபத்தான மரங்களை வளர்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளிலிலும், தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், சாலை ஓரங்களிலிலும் கோனோகார்பஸ் மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கோனாகார்பஸ் (Conocarpus) மரம் குறித்து தமிழக அரசு நிபுணர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, அந்த மரத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கிரீன் கமிட்டிகூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளேன் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x