Last Updated : 10 Jul, 2024 02:01 PM

1  

Published : 10 Jul 2024 02:01 PM
Last Updated : 10 Jul 2024 02:01 PM

முல்லைப் பெரியாறு கால்வாயில் விழுந்த யானையை தண்ணீரை நிறுத்தி மீட்ட அதிகாரிகள்!

அணையில் சிக்கிய யானை மீட்பு

குமுளி: தமிழகத்துக்கு தண்ணீர் வரும் முல்லைப் பெரியாறு கால்வாயில் தவறி விழுந்த யானையை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் கொண்டுவரப்படும் தண்ணீரானது சுமார் 2 கிலோ மீட்டர் திறந்த வாய்க்காலில் வருகிறது. அதன்பிறகு தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தலை மதகு பகுதியிலிருந்து சுரங்க வாய்க்கால் வழியாக கொண்டு வரப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 121.80 அடியாக உள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தேக்கடி வனப்பகுதியில் திறந்த வாய்க்காலை கடந்து சென்ற யானை ஒன்று வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யானை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஷட்டர் பகுதிக்கு முன்னால் உள்ள கிரில் கம்பிகளில் சிக்கிக்கொண்டது. இன்று காலை ஷட்டர் பகுதியில் யானை சிக்கிக்கொண்டு தவிப்பதை கண்ட தமிழக நீர்வளத்துறை உதவிப் பொறியாளர்கள் நவீன்குமார், ராஜகோபால் இதுகுறித்து தமிழக அதிகாரிகளுக்கும், தேக்கடி கேரள வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழக நீர்வளத்துறையினர் யானையை உயிருடன் மீட்பதற்காக அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்தினர். இதனால் நீரின் இழுவை வேகம் குறைந்தது. இதையடுத்து யானை வந்த வழியே தேக்கடி ஏரிப்பகுதிக்கு நீந்திச் சென்றது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்காலில் நீந்திச் சென்ற அந்த யானை, ஆழம் குறைவான பகுதிக்குச் சென்றதும் நடந்து கரையேறி வனப்பகுதிக்குள் சென்றது. துரிதமாக செயல்பட்டு யானையை காப்பாற்ற முழு முயற்சி எடுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் பொதுமக்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x