Published : 06 Jul 2024 04:38 PM
Last Updated : 06 Jul 2024 04:38 PM

‘பாரிஸ் பீகாக்’ முதல் ‘தமிழ் மறவன்’ வரை - முதுமலையில் வகை, வகையாக வண்ணத்துப்பூச்சிகள்!

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் 217 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், உயிர்ச்சூழல் மண்டலத்தில் விலங்குகளுக்கு நிகராக பூச்சி இனங்களும் மிகவும் முக்கியமானவை. அதாவது காலநிலை மாற்றம், தட்ப, வெப்ப நிலை ஆகியவற்றை வெளி உலகத்துக்கு காட்டக்கூடிய கருவிகளாக பூச்சி இனங்கள் உள்ளன.

இதில் மகரந்த சேர்க்கைக்கு மிகவும் முக்கியமானது வண்ணத்துப்பூச்சிகள். வண்ணத்துப்பூச்சிகள் எனப்படும் பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா எனும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன.

இவற்றில் மிகப் பெரிதான பட்டாம்பூச்சி பப்புவா நியூகினியா நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும்போது 28 செ.மீ. நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்கு குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி, இறக்கையை விரித்திருக்கும்போது 1 செ.மீ. தான் இருக்கும். சில பட்டாம்பூச்சிகள் 3000 கிலோ மீட்டர் வரை வலசை சென்று வரும். தமிழகத்தில் 329 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு பணி, முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இதில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், இயக்குநர் வித்யா மேற்பார்வையில் கோவையை சேர்ந்த இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு நிர்வாகி பாவேந்தன், உலகளாவிய வன உயிரின நிதியமைப்பு நிர்வாகி பூமிநாதன் மற்றும் வனத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இதில், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 49 பேர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 185 வகையான பட்டாம்பூச்சிகள் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ''நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 180 வகையான பட்டாம்பூச்சி இனங்களும், இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 185 வகையான பட்டாம்பூச்சி இனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்படி, தற்போது 217 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. எதிர்காலத்திலும் இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்தி மொத்தம் எத்தனை வகையான பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன என்பது குறித்து அறியப்படும்.

பட்டாம்பூச்சி இனங்கள் அதிகமாக இருந்தால், வனப்பகுதி செழுமையாக உள்ளது என்று அர்த்தம். வனம் சீராக இருந்தால் மழைப்பொழிவு மற்றும் உயிர்ச்சூழல் சங்கிலியில் அனைத்து பறவைகள், விலங்குகள் நன்றாக இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளை பாதுகாக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் மலபார் ரேவன், பாரிஸ் பீகாக், சாக்லேட் ஆல்பெட்ராஸ், தமிழ் மறவன் ஆகிய முக்கியமான இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது ''என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x