Published : 04 Jul 2024 05:32 PM
Last Updated : 04 Jul 2024 05:32 PM
சென்னை: தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை ஏரி புனரமைப்பு பணி 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் பிரதிநிதிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முன் வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பீர்க்கன்காரணையில் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான சுமார்115 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் மலைஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் சேகரமாகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் ஜப்பான் நாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 81 லட்சம் மதிப்பில் ஏரியை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.
இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி, வாகன நிறுத்துமிடம், பல்நோக்கு புல்வெளி, திறந்த வெளி திரையரங்குகள், ஆவின் பாலகம்,பொது மக்கள் ஏரி கரைகளில் அமரும் வகையில் இருக்கை வசதி, ஏரிக்குள் பறவைகள் தங்கும் வகையில் மரங்கள் நடும் பணி, ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் ஏரி கரையை பலப்படுத்தி கரையின் பக்கவாட்டில் கற்கள் புதைத்தல், ஷட்டர், நடைபாதை போன்றபணிகள் மட்டும் முடிவுற்றது.
நீர்வள ஆதாரத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை கையகப்படுத்தி ஒப்பந்ததாரருக்கு வழங்காததால் புனரமைப்பு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணி தொடங்கும்போது, 9 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து பணியை செய்ய முடியாது, கூடுதல் நிதி வழங்கினால் பணி செய்யப்படும் என கூறி ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. நீர்வள ஆதாரத்துறையினர் ஏரிக்கு புத்துயிர் கொடுக்க புனரமைப்பு பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னாள் கவுன்சிலர் ராஜ் கூறியது: 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பீர்க்கன்காரணை ஏரி மிகவும் சேதமடைந்தது. பொதுமக்களிடம் நிதிவசூலித்து, மக்கள் இணைந்து ஏரியைசீரமைக்கும் பணியை மேற்கொண்டோம். அதன்பின் ஏரியில் மீண்டும் கழிவுநீர் கலந்ததால் மீண்டும் ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்து ஏரி பாழாய் போனது.
நீர்வள ஆதாரத்துறையினர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை சீரமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் படகுசவாரி செய்யும் வகையில் புனரமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது. பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய பணியை செய்யாததால் ஒப்பந்ததாரர் மேற்கொண்டு பணியை செய்யாமல் பாதியிலே கைவிட்டார். ஏரியின் ஒரு பகுதியில் மாநகராட்சி குப்பை கொட்டி வந்தது. அதை சுத்தப்படுத்தி நீர்வள ஆதாரத்துறையினரிடம் இடத்தை ஒப்படைக்கவில்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது ஏரி வீட்டு கழிவுகளால் நிறைந்து மாசடைந்து நிலத்தடி நீரும் கெட்டுப் போய், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கூடுதல் நிதி ஒதுக்கி ஏரியை புனரமைக்க முன்வர வேண்டும். ஏரியில் பல்லுயிர் பெருக்கத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்; படகு சவாரி வசதி ஏற்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாக மாற்ற வேண்டும். பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதியில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூங்காக்கள், நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதி ௭ன பெரிய அளவில் எந்த வசதியும் இல்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
சமூக செயற்பட்டாளர் ஏழுமலை கூறியது: பீர்க்கன்காரணை ஏரி, 115 ஏக்கர் கொண்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக, 40 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இங்கு உள்ளன. இது மட்டுமின்றி மாநகராட்சி சார்பிலும் குப்பை கொட்ட ஏரி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
நீர்வள ஆதாரத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணிகளை தொடர்ந்து செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.9 கோடி வீணாய் போனது. தற்போது ஏரி மிகவும் பாழடைந்து கழிவுநீர் சேகரிக்கும் பகுதியாக மாறிவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், அமைச்சர்கள் பலரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. சிட்லபாக்கம் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், பீர்க்கன்காரணை ஏரியை ஏன் மறந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டிய பிரதிநிதிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனையாக உள்ளது. பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதியில் பெரிய அளவில் பூங்காக்கள் இல்லை. ஏரியை மேம்படுத்தி பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என்றார்.
இது குறித்து நீர்வள ஆதாரத் துறை வட்டாரங்களில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது: ஏரியின் ஒருபகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறையினர் ஒத்துழைக்கவில்லை. மேலும், அரசியல்வாதிகளும் இடையூறு செய்வதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் போனது.
அதேபோல தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் பணிகள் செய்ய முடியாமல் போனது. அரசு நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு தராததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. அதனால் திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதில் எங்கள் துறையால் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியவில்லை. அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT