Published : 01 Jul 2024 08:48 PM
Last Updated : 01 Jul 2024 08:48 PM
மதுரை: மதுரை நகருக்குள் ஓடும் கிருதுமால் நதி, நிலையூர் கால்வாய், பெருங்குடி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை மேம்படுத்த தமிழக அரசால் ரூ.20.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.7.35 கோடி கிருதுமால் நதி மேம்பாட்டுக்காக செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் கிருதுமால் நதியை மறுசீரமைக்கவும், அதன் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கி வேலைகள் செய்ய இருப்பது ஒரு வகையில் ஆறுதல்தான் என்றாலும், கிருதுமால் நதி அழிவுக்கு மூலமாக இருக்கும் காரணங்களை சரிசெய்தால்தான் அதனை மீட்க முடியும். தூர்வாருவதோடு நிற்காமல் கிருதுமால் நதியை பழைய நிலைக்கு மீட்கும் முயற்சிகளிலும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: “மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 73 கண்மாய்களை நிரப்பி, 4 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குகிறது கிருதுமால் நதி.
ஆனால் அது தொடங்கும் மதுரை பகுதியிலேயே சாக்கடையாக மாற்றப்பட்டு இருப்பது, கிருதுமால் நதியை நம்பிக் காத்திருக்கும் இதர 3 மாவட்ட மக்களுக்கும் நாம் செய்கிற அநீதியாகும். கிருதுமால் நதியின் மேம்பாடு என்று வருகிறபோது அதன் மீட்டுருவாக்கம் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும்.கிருதுமால் நதியை மேம்படுத்த ஆட்சியர் தலைமையில் நீர்வளத் துறை, மாநகராட்சி, நகர வளர்ச்சி அலுவலகம், வனத்துறை, சூழலியல் அறிஞர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று அமைத்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
கிருதுமால் நதியின் முக்கிய பிரச்சினை அதில் கலக்கும் கழிவுநீரும் ஆக்கிரமிப்பும்தான். மதுரை நகரத்தில் பல இடங்களில் கிருதுமால் நதியில் கழிவுநீர் கலக்கிறது. அது எத்தனை இடங்களில் கலக்கிறது, எத்தனை இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆவணம் செய்து, கிருதுமால் நதியில் கலக்கும் கழிவுநீர் மற்றும் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும். கிருதுமால் ஆற்றுக்கு இப்போது வைகை, விரகனூர் அணையில் இருந்து கிடைப்பது வைகையின் உபரி நீர்தான், உரிமை நீர் அல்ல என்பது கிருதுமால் நதி பாசன விவசாய சங்கத்தினரின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. அது சரிசெய்யப்பட வேண்டும். கிருதுமால் நதியின் நீர்ப்பிடிப்பு கண்மாய்களாக விளங்கிய துவரிமான், மாடக்குளம், தென்கரை, அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட கண்மாய்களை தூர்வாரி அதன் உபரிநீர் கிருதுமால் நதிக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இயல்பை மீட்க வேண்டும்: இதில் அனுப்பானடி கண்மாய், சிந்தாமணி கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர்ப்பிடிப்பு பகுதி சுருக்கப்பட்டுள்ளது. கிருதுமால் நதியின் மண் கரைகளை சிமென்ட் கலவைகளால் ஒரு வாய்க்காலைப் போல மாற்றி இருப்பது ஆற்று நீரை அதன் படுக்கை மற்றும் பக்கவாட்டுக் கரைகளில் ஊடுருவி பரவும் நதியின் இயல்பை தடுக்கும். மீண்டும் அதை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். கிருதுமால் நதியின் கரைகளில் இயல் தாவர வகை மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும். அம்முயற்சி கிருதுமால் நதியின் பசுமையை மீட்க உதவும்.
கிருதுமால் நதியின் கரையோரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான ஊர்கள், கோயில்கள், வரலாற்று சின்னங்கள் தொகுக்கப்பட்டு மதுரை அரசு அருங்காட்சியத்தில் கிருதுமால் நாகரிகம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள், தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும். மதுரை நகரத்தில் கிருதுமால் நதியின் மேலே அச்சம்பத்து, விராட்டிப்பத்து, பொன்மேனி, பைபாஸ், மதுரா கல்லூரி, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களில் கிருதுமால் நதியை குறிக்கும் பெயர்ப் பலகைகள் இடம் பெறச் செய்ய வேண்டும், ” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT