Published : 28 Jun 2024 03:45 PM
Last Updated : 28 Jun 2024 03:45 PM
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அமைக்கப்பட்டு வரும் மழைநீரை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்பார்க்குகளை ரூ.20 கோடியில் மேலும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும், நேரடியாக மாநகராட்சி மூலமாகவும், தத்தெடுக்கும் முறைகள் மூலமாகவும் சுமார்835 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையை உயர்தர நகரமாக உயர்த்தும் நோக்கத்துடன் பூங்காக்களில் ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் கூடிய குட்டைகள் கடந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டு வருகின்றன.
பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ அதேபோல இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் மழைநீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் பூங்கா அமைந்திருக்கும் இடம், சாலைகள் அமைப்பு, மண்ணின் தன்மை போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப அமைக்கப்படுகின்றன.
கட்டிடங்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் பெய்யும் மழை நீரை தேங்கவிடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்ட ஸ்பாஞ்ச் பார்க்குகள், குட்டைபோன்ற அமைப்பையும், அகழியையும் கொண்டுள்ளன. இந்த அகழிகள் சாலையில் இருந்து நீரை எடுத்து சென்று, மழைநீர் வடிகால் வழியாக தண்ணீரை குட்டைக்கு கொண்டு சேர்க்கும்.
பூங்காக்களில் பாதுகாப்பு வேலியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குட்டைகள் அருகே, மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பும் இடம்பெறுவதால், குட்டையை சுற்றிலும் ஈரப்பதத்துடன் காட்சியளிக்கிறது. இதன்மூலம் குட்டையை சுற்றி மரங்களைவளர்க்க ஏதுவாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் முதல்கட்டமாக ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அந்தவகையில் சிந்தாதிரிப்பேட்டை மே தினபூங்கா, வேப்பேரி மை லேடீஸ் பூங்கா, கொளத்தூர் வி.வி.நகர் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொரட்டூர் பெரியார் நகர் பூங்கா, சூளைமேடு கில் நகர் பூங்கா, நந்தனம் டர்ன்ஸ் புல் பூங்கா, மணப்பாக்கம் பெல் நகர் பூங்கா, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்களில் இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
முன்னதாக சென்னையில் இனி புதிதாக அமைக்கப்படும் அனைத்து பூங்காக்களிலும் இந்த வசதி தவறாமல் இடம்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அடுத்தகட்டமாக சென்னை பூங்காக்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி தற்போது திட்டமிட்டுவருகிறது.
பருவமழை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், ஸ்பாஞ்ச் பார்க்குகளின் பயன்பாடு பெரிதளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் முதல்கட்டமாக 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்கதிட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதுவரை 50 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
மீதமுள்ள இடங்களிலும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக சென்னை பூங்காக்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பாஞ்ச் பார்க்குகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறோம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பாஞ்ச் பார்க்குகள் சில இடங்களில் பராமரிப்பின்றி காட்சியளித்து கொண்டிருப்பதாக பூங்காக்களுக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இலை தழைகளால் நிரம்பியும், குப்பைகளால் நிரப்பப்பட்டும் ஸ்பாஞ்ச்பார்க்குகள் சாதாரண குப்பைதொட்டியைபோல காட்சியளிப்பது பூங்காக்களுக்கு வருகை தரும் மக்களை கவலையுற செய்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பூங்கா நிர்வாகிகள் ஸ்பாஞ்ச் பார்க்குகள் முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT