Published : 27 Jun 2024 05:17 PM
Last Updated : 27 Jun 2024 05:17 PM
தமிழ் சங்க இலக்கியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில், ‘ஓங்கு மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்துகு பெருந்தேன்’ என்று வரையாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த மலைகளிலே உலவுகிற வரையாடு என்பது இதன் பொருளாகும்.வரையாடு, சங்க இலக்கியத்தில் வருடை என அழைக்கப்படுகிறது. வரையாடுகளின் சூழலியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு இதை மாநில விலங்காக அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
வரலாற்று ரீதியாக நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.தற்போது வாழ்விடங்கள் சுருக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. வரையாடு கடல் மட்டத்தில் இருந்து1,300 மீட்டர் முதல் 2,600 மீட்டர் உயரத்தில் மைனஸ் டிகிரி தட்பவெப்ப சூழலில் புல்வெளிகள் நிறைந்த செங்குத்தான மலைக்குன்றுகள், உயர்ந்த மலைகளின் சறுக்குப் பாதைகள், சிகரங்களில் மட்டுமே வாழும் தன்மை உடையது. செங்குத்தான மலைச் சரிவுகளில் அசாத்தியமாக நடக்கும் குளம்புகளையும், கால்களையும் கொண்டது. நீலகிரி வரையாடுகளை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
இடம்பெயர்தல் தவிர்ப்பு: ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சிறுவாணி, பழநிஉயர் சிகரங்களில் வரையாடுகள் வசிக்கின்றன. மலை முகடு பகுதிகளில் வாழும் வரையாடுகள் இடம்பெயர்ந்துமற்ற பகுதிகளுக்கு செல்வதில்லை.மேற்குத்தொடர்ச்சி மலையில் வரையாடுகளின் நிலை மற்றும் பரவல் குறித்து, 2015-ம்ஆண்டில் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அளித்த ஆய்வறிக்கையின்படி 3,122 வரையாடுகள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
பசுமை போர்த்திய புல்வெளிகளில் வாழும் வரையாடுகள் வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் பிறக்கும் குறிஞ்சி நிலப்பரப்பின் செழுமையை குன்றாமல் பாதுகாக்கும் பணியை செய்கின்றன. மனித இனத்துக்கு உதவிகரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளை அதிகப்படுத்துவது, தனித்துவமான சோலைப்புல்வெளியைப்பராமரிப்பது போன்றவைகளால் வரையாடுகள், மலைகளின் பாதுகாவலர்கள் என அழைக்கப்படுகின்றன. வரையாடுகளை, அதன் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2023 அக்.12-ம் தேதி நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடியில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்செய்து வைத்தார்.
சூழலியல் முக்கியத்துவம்: புற்கள், மூலிகைகள், புதர்கள், பயிறு வகை தாவரங்கள் மற்றும் ஒரு சில மர இனங்கள் உட்பட சுமார் 120-க்கும் மேற்பட்டதாவரங்களை உணவாக வரையாடுகள் உட்கொள்கின்றன. மறுசுழற்சி செயல்முறையின் மூலம் மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் வளமாக இருக்க உதவியாக இருக்கிறது.
வாழ்விடம் துண்டிப்பு, வாழ்விடத்தில் களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ, வனத்தின் வளங்களை அதிகளவு சுரண்டுதல் ஆகியவை வரையாடுகளை பாதுகாப்பதில் சவாலாக உள்ளன. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு லட்சக்கணக்கில் இருந்த வரையாடுகள் சில ஆயிரங்கள் என குறைந்த பின்னணியில் வேட்டையாடுதல், வாழ்விடங்கள் அழிப்பு, உணவு மற்றும் நீர் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்கள் உள்ளன. புலி, சிறுத்தை, குள்ள நரி, செந்நாய் போன்றவற்றால் நீலகிரி வரையாடுகள் வேட்டையாடப்படுகின்றன.
நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மீள் அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து, கோவையில் உள்ள நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன் கூறியதாவது: நீலகிரி வரையாடு திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் வாழும் வரையாடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விரைவில் வரையாடுகள் கணக்கெடுப்பு விவரங்களை அரசு வெளியிடும். நீலகிரி வரையாடுகள், ஏற்கெனவே வாழ்ந்த இடத்தில் தற்போது இல்லை.
இது போன்ற வாழ தகுந்த இடத்தில் நீலகிரி வரையாடுகள் மீள் அறிமுகம் செய்யப்படும். நீலகிரியில் உள்ள கிளன்மார்கன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியமூன்று இடங்களில் வரையாடுகள் வசிக்க ஏதுவான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி, நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து மேற்குறிப்பிட்ட மலை பகுதிகளின் அருகில் வசிக்கும் நீலகிரி வரையாடுகள், மிக அருகிலேயே மீள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. நீலகிரி வரையாடுகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மனித தலையீடு, சூழல் பாதிப்பு மற்றும் வனத்தீ ஆகியவை முக்கிய சவாலாக உள்ளது.
எந்தவித தொந்தரவுகளற்ற, மிகுந்த பாதுகாப்பு மிக்க பகுதிகளில் நீலகிரி வரையாடுகளை மீள் அறிமுகம் செய்து அதன் எண்ணிக்கையையும், வாழ்விடத்தின் பரப்பையும் அதிகரிக்க உள்ளோம். தற்போது முதல்கட்ட நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT