Published : 14 Jun 2024 04:52 PM
Last Updated : 14 Jun 2024 04:52 PM
மூணாறு: தேனியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மூணாறு. முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடம் என்பதால், மூன்றாறு என்று அழைக்கப்பட்டு பின்பு மூணாறாக மாறியது. விண்ணை முட்டும் மலைகளும், சரிவான பள்ளத்தாக்குகளும் இங்கு அதிகம் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், சில்லென்ற பருவநிலையும், மூடுபனியும், சாரலும் ஆண்டின் பல மாதங்களுக்கு நீடிக்கிறது. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மூணாறு உள்ளது. இங்கு மாட்டுப்பட்டி அணை, இரவிகுளம் தேசிய பூங்கா, எக்கோ பாயின்ட், சின்னக்கானல் அருவி, தேயிலை மியூசியம் உள்ளிட்ட ஏராள மான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
சுற்றுலா வர்த்தகத்தை சார்ந்தே மூணாறு உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும், சுற்றுச்சூழலில் சிறப்பு கவனமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இங்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதுடன், குப்பை கள், கழிவுகளை தூக்கி எறிய தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், இங்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர்.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூணாறு - அடிமாலி சாலை சந்திப்பில் கிராம பஞ்சாயத்து சார்பில், பிளாஸ்டிக் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நகரின் பல பகுதிகளிலும் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றின் மூலம் யானை, மீன், மரம் போன்ற பல்வேறு கலைநயமிக்க உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு இந்த பூங்காவில் இருக்கைகள், காட்டுமாடு, வரையாடு போன்ற உருவங்களையும் உருவாக்கி உள்ளனர்.
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு யானை உள்ளிட்ட விலங்குகள் போல தெரிந்தாலும், அருகில் சென்று பார்க்கும்போது, பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வடிவமைத் துள்ளது தெரிகிறது. இந்த பிளாஸ்டிக் கலை பூங்காவில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இரவு விளக்கொளியிலும் இந்த பூங்கா ஜொலிக்கிறது.
இது குறித்து சுற்றுலா வழிகாட்டி முத்து என்பவர் கூறுகையில், கேரளா வில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியாக மூணாறு உள்ளது. அவர்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களால் நகர் வெகு வாய் மாசடைந்து வந்தது. எனவே, கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீசி எறியப்பட்ட இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, கலைநயமிக்க உருவங்கள், பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT