Last Updated : 29 May, 2024 05:22 PM

 

Published : 29 May 2024 05:22 PM
Last Updated : 29 May 2024 05:22 PM

யானை வழித்தடங்களில் மின் கம்பிகளின் உயரத்தை அதிகப்படுத்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

மதுரை: தமிழக வனப்பகுதியில் யானை வழித்தடங்களில் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை அதிகப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கலைநகரைச் சேர்ந்த பாலு ராஜசேகரன், என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்தியாவின் தெற்கு பகுதியில் 17,400 யானைகள் வாழ்கின்றன. தமிழகத்தில் 7,940 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 யானைகள் சரணாலயம் உள்ளன. பெரும்பாலான யானைகள் முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, பெரியார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்கின்றன.

தமிழகத்தில் யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. 2008-ல் 84 யானைகளும், 2019-ல் 108 யானைகளும் இறந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கணக்கில் வராத யானை இறப்புகளும் உள்ளன. யானைகள் இறப்புக்கு யானைகளின் வலசை பாதைகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கும், பொது மக்களின் வாழிடங்களுக்கும் இடையில் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும் என விதிகள் இருந்தாலும், அந்த இடங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இப்பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் உரசி யானைகள் உயிரிழந்து வருகின்றன.

கன்னிவாடி, தோனிமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குட்டை கொம்பன் என்ற 25 வயதுள்ள யானை கடந்த 5-ம் தேதி உயர் அழுத்த மின்கம்பி உரசி உயிரிழந்தது. மே 7-ல் கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் சந்தனபள்ளியில் 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

இதனால் யானைகளின் வழித்தடங்களில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதை தடுக்க வேண்டும். மின் கம்பிகள் இருந்தால் அவை அதிக உயரத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு அலட்சிய போக்குடனே செயல்படுகிறது.

எனவே, யானை மற்றும் வன விலங்குகள் வாழும் பகுதிகளில் போதுமான அளவு குடிநீர் வசதி ஏற்படுத்தவும், யானை மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடங்களில் உள்ள மின் கம்பிகளின் உயரத்தை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் விஜயகுமார், அருள்முருகன் அமர்வு, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x