Published : 21 May 2024 05:30 AM
Last Updated : 21 May 2024 05:30 AM
சென்னை: சென்னை மாநகராட்சி வசம் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதாகவும் அது தொடர்பாக வனத்துறைக்கு தெரிவித்திருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு செய்தி வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், மாநகராட்சி நிர்வாகம், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் 173.56 ஹெக்டேர் பரப்பளவில் மாநகரில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகிறது. அதில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சுமார் 16 ஹெக்டேர் பரப்பளவு நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள இடத்தை எப்போது மீட்டெடுத்து, சதுப்பு நிலப்பகுதியாக வனத்துறை பராமரிக்கும் திட்டத்துக்கு ஒப்படைக்கப்படும் என பதில் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சி அண்மையில் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீட்டெடுக்கும் பணி: மாநகராட்சி நிர்வாகம் கடந்த 30 ஆண்டுகளாக பெருங்குடி பகுதியில் (பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி) கொட்டியுள்ள குப்பைகள் 30.61லட்சம் கனஅடி அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை பயோ மைனிங் முறையில் தூய்மைஇந்தியா இயக்க நிதியில் ரூ.350.65 கோடியில் அகழ்ந்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 14 லட்சத்து 55 ஆயிரம் கனஅடி குப்பைகள் (48 சதவீதம்) அகற்றப்பட்டு 16 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இப்பணி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும்.
இங்கு மீட்கப்படும் இடத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா, பசுமை போர்வை ஏற்படுத்தும் பெருந்திட்டம் ஒன்றை வகுக்க, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலமாக கலந்தாலோசனை முகமை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு கடந்தஆண்டே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT