Published : 20 May 2024 10:07 PM
Last Updated : 20 May 2024 10:07 PM
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் கடந்த சில மாதங்களில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், உடல் நலக்குறைவாலும், போதிய உணவு உட்கொள்ளாமலும் அணைப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானை ஒன்று, இன்று (மே 20) காலை திடீரென கீழே படுத்து எழ முடியாமல் தவித்தது. இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
ஆனால், சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று மதியம் யானை உயிரிழந்தது. கால்நடை மருத்துவ குழுவினரால் உடற்கூறு பரிசோதனை நடத்திய பின்னர், உயிரிழந்த இடத்தின் அருகேயே பள்ளம் தோண்டி யானையின் சடலம் புதைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களில் மட்டும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகங்களில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தன. தற்போது மற்றொரு யானை உயிரிழந்தது, வனத்துறை மற்றும் சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT