Last Updated : 20 May, 2024 09:17 PM

 

Published : 20 May 2024 09:17 PM
Last Updated : 20 May 2024 09:17 PM

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் 7 டன் மீன்கள் - ஆலைக் கழிவுநீர் கலப்பதாக புகார்

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு ரசாயனக் கழிவு கலந்த நீர் வந்ததைத் தொடர்ந்து, அணையில் தற்போது 7 டன் மீன்கள் செத்து மிதக்கின்றன. கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் மழை நீரோடு வந்ததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் மழை பெய்த நிலையில், மழை நீருடன் கழிவு நீரும் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன், நுரை பொங்கியபடி வந்து சேர்ந்தது. தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்பட்ட நீர், 11 தடுப்பணைகளைக் கடந்து 15-ம் தேதி கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்தது.

இந்நிலையில், ரசாயனக் கழிவு காரணமாக, தற்போது, கிருஷ்ணகிரி அணை நீரின் மேல் பகுதியில் மீன்கள் ஏராளமான எண்ணிக்கையில் செத்து மிதக்கின்றன. இதனால், மீன் பிடிப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே, அணை நீரில் மிதந்த செத்த மீன்கள், அணையின் ஷட்டர் பகுதியில் ஒதுங்கி வருகின்றன. அணையின் நீர் பச்சை நிறத்தில் சேறு கலந்தது போல மாறிவிட்டது.

இது குறித்து அப்பகுதியில் மீன்பிடிப்பவர்கள் கூறியது: ‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவு நீர் , மழை நீருடன் வெளியேற்றப்பட்டு, அந்த நீர் கிருஷ்ணகிரி அணைக்கு வந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணையில் இன்று காலை வரை 2 கிலோ எடை கொண்ட மீன்கள் உள்பட சுமார் 7 டன் மீன்கள் ஷட்டர் அருகே ஒதுங்கி உள்ளன. இதுவரை மீன் வளத்துறை அலுவலர்கள் யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை.

இறந்த மீன்களை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணை பகுதிக்கு எவரும் செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தற்போது மீதமுள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு, சிரமம் ஏற்பட்டுள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழிலை நம்பியுள்ள 500 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’, என்றனர்.

இது தொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரத்னம் கூறுகையில், ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்’, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x