Published : 17 May 2024 05:32 AM
Last Updated : 17 May 2024 05:32 AM

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குடும்பத்தினர் பாதுகாப்புடன் உறங்கும் குட்டி யானை: வைரலாகும் வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குடும்பத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில், தாயுடன் உறங்கும் குட்டி யானை.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் யானைகளின் இடப் பெயர்வு, விலங்குகளின் நடமாட்டத்தை வனத் துறையினர் அதிநவீன ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களாக வெப்பஅலை காரணமாக யானைகள், வரையாடுகள், மான்கள் உள்ளிட்டவை உணவு, தண்ணீருக்காக தொடர்ந்து இடம்பெயர்ந்தன. இதை வனத் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் கோடைமழை பெய்து, மீண்டும் புற்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. கடும் வெப்பம் குறைந்து, குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இந்நிலையில், உணவு தேடி புல்வெளிப் பகுதிக்கு குட்டியுடன் சென்ற யானைக் கூட்டம், உண்ட களைப்பில், இதமான குளிர்ந்த சூழலில் உறங்கியது.

சுற்றிலும் குடும்ப உறுப்பினர்களான பெரிய யானைகளின் பாதுகாப்பில் குட்டி யானை உறங்கும் காட்சியை, ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத் துறையினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதை தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த காடுகளில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் `இசட் பிரிவு' பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். இவை நமது சொந்த குடும்பம் போலவே உள்ளன என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x