Last Updated : 16 May, 2024 05:27 PM

 

Published : 16 May 2024 05:27 PM
Last Updated : 16 May 2024 05:27 PM

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் கால்நடைகள் உடன் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் |  படம்: ஜெ.மனோகரன்.

கோவை: யானைகள் வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை அரசு திரும்பப் பெறாவிட்டால் கால்நடைகளுடன் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசின் வனத்துறையின் சார்பில், சமீபத்தில் தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கோவையில் 4 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 42 இடங்கள் யானை வழித்தடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. இச்சூழலில், யானை வழித்தடங்கள் அறிக்கை தொடர்பாக கோவையில் இன்று விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: “கடந்த 1972-ம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பல்வேறு காரணங்களால் காட்டு விலங்குகள் அதிகளவில் வனத்தை விட்டு வெளியே வந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இவை விளை பொருட்களை சேதப்படுத்துவதோடு, குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது. மலையையொட்டி பொழுதுபோக்கு மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல வகை கட்டிடங்கள் உருவாவதாலும், அதனால் வனவிலங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும் அவை வனத்தை விட்டு வெளியே வருகின்றன.

வனவிலங்குகளால் விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்து வரும் சூழலில், தமிழக அரசின் சார்பில் யானை வழித்தடங்கள் குறித்த 161 பக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ளதால் விவசாயிகள் படித்து கருத்து தெரிவிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு பதில் தெரிவிக்க உரிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை.யானைகள் வழித்தடம் குறித்து விவசாயிகள், குடியிருப்புவாசிகள் என யாரிடமும் எந்த கருத்தையும் குழுவினர் கேட்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை முதல்வர் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். கோவையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி வனச்சரக பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 520 ஏக்கருக்கு மேல் விவசாய பூமிகளை யானைகள் வழித்தடமாக கையகப்படுத்துவதை ஒரு தலைபட்ச நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்.இவை கையகப்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும்.

வனத்துறை அதிகாரிகள் இந்த அறிக்கையை தமிழில் மாற்றம் செய்து பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரிடமும் கருத்துக் கேட்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும். இந்த வரைவு அறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சாலைகளில் கால்நடைகளுடன் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x