Published : 14 May 2024 04:06 AM
Last Updated : 14 May 2024 04:06 AM

தொழிற்சாலை கழிவு நீரால் தென்பெண்ணை ஆற்றில் நுரை பொங்கச் செல்லும் நீர்!

தொழிற்சாலைகளிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், இரு கரைகளையும் மறைத்தபடி நுரை படர்ந்து செல்கிறது.

ஓசூர்: கெலவரப்பள்ளி அணையி லிருந்து தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் நுரை பொங்கச் செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு, கர்நாடக மாநிலம் தென் பெண்ணை ஆற்று நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து நீர்வரத்து உள்ளது. இதனை நம்பி 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. கடந்த ஓர் ஆண்டாக மதகுகளில் ஷட்டர் மாற்றும் பணியால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் பணி நிறைவுபெற்று, அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தென் பெண்ணை ஆறு நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் தற்போது அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 32 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 205 கன அடி நீர் வரத்து இருந்தது.

அணையிலிருந்து விநாடிக்கு 570 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. ஓர் ஆண்டாக விவசாய பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நிகழாண்டு 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையி்ல், அதிகளவில் ரசாயனம் கலந்த தண்ணீர் நுரை பொங்கியபடி செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்தாண்டு மதகுகளில் ஷட்டர்கள் மாற்றும் பணிக்காக தண்ணீர் திறக்காததால், கடந்த ஓர் ஆண்டாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். இந்நிலையில் ஷட்டர் மாற்றும் பணி முடிந்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நீர் அதிகப்படியாக வெளியேற்றுவதால், அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடும் தண்ணீர் தற்போது நுரை பொங்கியபடி செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது, இது போன்ற கழிவு நீர் திறக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும், இதனைத் தடுக்க முடியவில்லை. இந்த நீரால் மண் மலட்டு தன்மைக்கு மாறி விவசாயம் செய்ய முடியாத பூமியாக மாறி விடுமோ என அச்சமாக உள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x