Published : 12 May 2024 04:08 AM
Last Updated : 12 May 2024 04:08 AM
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பொதுப்பணித் துறை சார்பில் புதிய கட்டிடம் கட்ட ரூ.5.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் இருந்த ஒதியன், வேம்பு, சரக்கொன்றை என 14 மரங்களை முழுவதும் வெட்டி அகற்றுவதற்கு பதிலாக, அவற்றின் கிளைகளை மட்டும் வெட்டி, மரத்தை வேருடன் பிடுங்கி, மாற்று இடத்தில் நட்டு பராமரிக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கீரின் கேர் அறக்கட்டளையினர் அளித்த ஆலோசனையின் பேரில், கட்டிடம் கட்டும் இடத்தில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி, கல்லூரி வளாகத்திலேயே வேறு இடங்களில் நட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதில், முதற்கட்டமாக மரத்தின் நீளம், அகலம் அளவிடப்பட்டு, மாற்று இடத்தில் அதற்கான குழிகள் தோண்டப்பட்டன.
பின்னர் மரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இலைகள் மற்றும் துளிர் வேர்கள் அகற்றப்பட்டு, மார்ச் மாதத்தில் பொக்லைன் உதவியுடன் வேருடன் பிடுங்கப்பட்ட மரங்கள், ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த குழிகளில் மீண்டும் நடப்பட்டன. மேலும், மரங்கள் பட்டுப் போகாத வகையில், கிளைகளில் சணல் சாக்கு கொண்டு மூடப்பட்டு, நாள்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வந்தது. மாற்று இடத்தில் நடப்பட்டு 2 மாதங்களான நிலையில், தற்போது அந்த மரங்களின் கிளைகளில் இலைகள் துளிர்விட்டு வளர்ந்து வருகின்றன.
இது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து, வனத்துறை பகுதிகளில் மரங்களை காக்கும் பொருட்டு, முன்மாதிரி நடவடிக்கையாக உள்ள இந்த மரங்களுக்கான மறுவாழ்வு திட்டத்தை திருச்சி மாவட்ட வனத் துறை அதிகாரிகள் பாராட்டியதுடன், இந்த இடத்தில் வனத்துறையினர் பயிற்சி பெறும் இடமாக தேர்வு செய்துள்ளனர். இதே போல, திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் உள்ள 12 மரங்கள் விரைவில் இதே போல அகற்றப்பட்டு, வேறு இடத்தில் நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, கிரீன் கேர் அறக்கட்டளை நிர்வாகி சையது கூறியது: எங்கள் அமைப்பின் சார்பில் மாநில அளவில் அரசு மற்றும் தனியார் இடங்களில் புதிய கட்டிடம் கட்டும் இடங்களில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நடப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன. இதனால் இயற்கை வளம் பாதுகாப்பது மட்டுமின்றி, மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டமாக செயல்படுத்தி வருகிறோம் என்றார். மாற்று இடத்தில் நடப்பட்டு 2 மாதங்களான நிலையில், மரங்க ளின் கிளைகளில் இலைகள் துளிர்விட்டு வளர்ந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT