Published : 09 May 2024 04:06 AM
Last Updated : 09 May 2024 04:06 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ

பிரதிநிதித்துவப் படம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ மலை உச்சி வரை பரவி உள்ளது. கடும் வெயில், காற்று காரணமாக காட்டுத்தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் விரியன் கோயில் பீட், கான்சாபுரம் பீட் ஆகியற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 6-ம் தேதி மாலை இடி விழுந்ததில் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனடியாக வனத்துக்குள் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோடை வெயில் காரணமாக வனப்பகுதி வறண்டு செடி கொடிகள் காய்ந்து இருந்ததால் தீ வேகமாக பரவியது. அப்பகுதி புற்கள் நிறைந்த சமவெளியாக இருப்பதால் காட்டுத்தீ வேகமாக பற்றி மலை உச்சி வரை பரவியது. காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக பச்சைப் புற்களும் காட்டுத் தீயில் எரிகிறது. சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீயில் கருகி விட்டது.

மலை உச்சியில் தீ எரிவதால், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள வனத்துறையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வது சவாலாக உள்ளது. இதனால் நேற்று கூடுதலாக அத்திகோயில் பகுதியில் இருந்து வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அழைத்து வரப்பட்டு காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜன் கூறுகையில், சமவெளிப் பகுதியில் பற்றிய காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விரியன் கோவில் - கான்சாபுரம் பீட்களுக்கு இடையே மலை உச்சியில் தீ எரிவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x