Published : 07 May 2024 04:08 AM
Last Updated : 07 May 2024 04:08 AM
கிருஷ்ணகிரி: மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் சாலையோரங்களில் தீயை அணைக்காமல் வீசப்படும் பீடி மற்றும் சிகரெட் துண்டுகளால் மாந்தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டு மாமரங்கள் எரிந்து சேதமாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர். நிகழாண்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் கோடை வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, மா மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் வறட்சி நிலவுவதால், நீரின்றி மாமரங்கள் சருகாகி வருகின்றன.
இயற்கையான புதர்கள்: இந்நிலையில், சாலையோரங்களில் புகைத்துவிட்டு தீயை அணைக்காமல் எரியப்படும் பீடி மற்றும் சிகரெட் துண்டுகளில் உள்ள தீக்கனல் சாலையோர வேலி செடிகளில் பற்றி தீப்பிடித்து, சாலையோர மாந்தோட்டங்களில் பரவி மாமரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: மத்தூர், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் உள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களைச் சுற்றி இயற்கையாக வளரும் புதர் மற்றும் முட்செடிகளை விவசாயிகள் வேலியாக மாற்றியுள்ளனர்.
மணலை இறைக்கும் நிலை: சில விவசாயிகள் கற்கள் மூலம் தோட்டத்தைச் சுற்றி முள்கம்பிவேலிகளை அமைத்து தோட்டங்களைப் பராமரித்து வருகின்றனர். தற்போது, நிலவும் வறட்சியால், சாலையோரம் உள்ள செடி, கொடிகள், புதர்கள் காய்ந்துள்ளன. இச்சாலை வழியாகச் செல்வோர் புகைத்து விட்டு தூக்கி எரியும் பீடி மற்றும் சிகரெட் மூலம் வேலி செடிகளில் அடிக்கடி தீ பிடித்து எரிந்து மாந்தோட்டங்களில் பரவி மாமரங்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இவ்வாறு தீ பிடிக்கும் போது, தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் மணலை இறைத்து தீயைக் கட்டுப்படுத்தும் நிலையுள்ளது. குறிப்பாக, மத்தூரிலிருந்து பர்கூர் செல்லும் சாலையில் கூச்சூர் பகுதியில் 5 இடங்களிலும், அத்திகானூர் கிராமத்திலிருந்து போச்சம்பள்ளி மற்றும் சந்தூர் செல்லும் சாலைகளில் 9 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மாமரங்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும் - கரடிகொல்லப்பட்டியைச் சேர்ந்த மா விவசாயி கோவிந்த ராஜ் மற்றும் சிலர் கூறியதாவது: சாலையோரம் உள்ள காய்ந்து சருகான புதர்செடிகள் மீது பீடி, சிகரெட் புகைக்கும் சிலர், அதனை அணைக்காமல் வீசி செல்கின்றனர். இதில் புதர்கள் தீப்பற்றி எரிந்து, மாமரங்களுக்குப் பரவுகிறது. இதுபோல் ஏற்பட்ட தீயில் எனது தோட்டத்தில் 20 மாமரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
மா மகசூல் இழப்பு, மரங்களில் நோய்த் தாக்குதல் என பல்வேறு இன்னலுக்கு இடையில் மா மரங்களைப் பராமரித்து வரும் நிலையில், இது போன்ற நிகழ்வுகளால் மா மரங்களைப் பாதுகாக்கவும் விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போதிய விழிப்புணர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT