Published : 02 May 2024 10:05 AM
Last Updated : 02 May 2024 10:05 AM
கிருஷ்ணகிரி: போதிய மழையின்மை மற்றும் நீர்வரத்து இல்லாததால் பாரூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 3.60 அடியாக சரிந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சரிவைச் சந்தித்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
போச்சம்பள்ளி வட்டம் பாரூரில் 600 ஏக்கர் பரப்பளவில் பாரூர் பெரிய ஏரி உள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆறு வழியாக நெடுங்கல் தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து பெரிய ஏரிக்கு வருகிறது. இந்த ஏரியில் 249 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.
2,397 ஏக்கர் நிலம் பயன்: இந்த ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1,583.75 ஏக்கர் நிலமும்,மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலமும் என மொத்தம் 2,397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதோடு, இருபோக விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் இந்த ஏரி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய்கள் மூலம் போச்சம்பள்ளி, மத்தூர், பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கும் தண்ணீர் செல்கிறது.
வெப்பக் காற்றால் நீர்மட்டம் சரிவு: தற்போது, வெயில் உக்கிரம் மற்றும் வெப்பக் காற்று வீசி வரும் நிலையில், நீர்வரத்தின்றி பெரிய ஏரியின் நீர் மட்டம் படிப்படியாகச் சரிந்து குட்டைபோல மாறியுள்ளது. ஏரியின் ஒரு பகுதி நீரின்றி வறண்டு, மேய்ச்சல் நிலம்போல மாறியுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் நேற்று நீர்மட்டம் 3.60 அடியாகச் சரிந்தது. இதனால், இப்பகுதி மக்களுக்குக் குடிநீர் மற்றும் முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கோடையிலும் குறைவதில்லை - இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது. தென் பெண்ணை ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்ட பாரூர் ஏரியில் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் 10 அடிக்குக் குறையாமல் நீர் இருப்பு இருக்கும். நிகழாண்டில் போதிய மழை இல்லாததாலும், கடும் வெயில் மற்றும் வெப்ப காற்று வீசி வரும் நிலையில் ஏரிக்கு கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து முற்றிலும் இல்லை.
இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏரியின் நீர்மட்டம் சரிந்து, இப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. வரும் நாட்களில் கோடை மழை கைகொடுத்தால் மட்டும் இப்பகுதியின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும், ஏரியில் நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால் வரும் நாட்களில் பருவ மழை பெய்தாலும், முதல் போகப் பாசனத்துக்கு நீர் திறக்க கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...