Published : 01 May 2024 11:01 PM
Last Updated : 01 May 2024 11:01 PM

நிலவில் நீர் ஆதாரம் - இஸ்ரோ ஆய்வில் தகவல்

நிலவின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்களை சுட்டிக்காட்டும் படம் - சந்திரயான்-1ன் டெரெய்ன் மேப்பிங் கேமரா கடந்த 2008-ல் எடுத்தது

பெங்களூரு: நிலவின் துருவப்பகுதியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பனி வடிவில் தண்ணீர் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் போன்றவற்றுடன் இணைந்து இஸ்ரோ விண்வெளி பயன்பாட்டு மைய விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் துருவப் பள்ளங்களின் மேற்பரப்பில் உள்ளதை காட்டிலும் அதற்கு கீழுள்ள சப்-சர்ஃபேஸ் பகுதியின் முதல் இரண்டு மீட்டர்களில் பனியின் அளவு ஐந்து முதல் எட்டு மடங்கு வரை பெரிதாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இரண்டு துருவப் பகுதிகளிலும் இது காணப்படுவதாக தகவல்.

எதிர்வரும் நிலவு பயணங்களில் அந்த பனியின் மாதிரியை சேகரிக்கும் நோக்கில் சந்திரனில் துளையிடுவது முதன்மையான நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மனிதர்கள் அங்கு தங்குவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வட துருவப் பகுதியில் உள்ள பனியின் அளவு தென் துருவப் பகுதியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இம்ப்ரியன் கால எரிமலை அவுட்-கேஸிங் (வாயு) ஏற்பட்ட போது துருவப் பகுதியில் பனியின் ஆதாரம் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு சுமார் ஏழு கருவிகளை ஆய்வுக் குழுவினர் பயன்படுத்தி உள்ளனர்.

சந்திரயான்-2ன் ட்யூயல் ஃப்ரீக்வென்ஸி சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் கருவியின் போலரிமெட்ரிக் ரேடார் தரவைப் பயன்படுத்தி துருவப் பள்ளங்களில் நீர் பனி இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து சுட்டிக்காட்டிய முடிவையும் இந்த ஆய்வு ஆதரிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x