Published : 24 Apr 2024 06:26 AM
Last Updated : 24 Apr 2024 06:26 AM
ஜெனிவா: இயற்கை பேரிடர்களால் 2023-ம் ஆண்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்றும். மேலும் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா இருப்பதாகவும் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
2023-ம் ஆண்டில் வட இந்திய கடலோர பகுதிகளில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை உண்டானதால் கடந்த மே 14-ம் தேதி மோச்சா சூறாவளி மியான்மரின் ரக்கைன்கடலோரப் பகுதியை தாக்கியது. இதனால் அங்குள்ள குடியிருப்புகள், சாலைகள் சேதமடைந்தன. 156 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோன்று கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறு உலக வானிலை மையம் கூறியது.
எரிபொருள் அதீத பயன்பாடு: இதையடுத்து லண்டன் இம்பீரியல் கல்லூரியின் காலநிலை அறிவியல் துறை மூத்த விரிவுரையாளர் ஃபெரட்ரிக் ஓட்டோ கூறும்போது, "இந்தியாவில் பழுப்பு நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை அதீதமாக பயன்படுத்துவதால் அந்நாட்டில் கடும் வெப்ப அலை வீசத்தொடங்கியுள்ளது.
பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை நிறுத்தும் வரை இந்தியாவின் வெப்பநிலை மென்மேலும் அதிகரித்து அபாய கட்டத்தை எட்டுவதை தடுக்க முடியாது" என்றார்.
சூழலியல் ஆய்வாளர் ஹர்ஜீத் சிங் கூறியதாவது: இந்திய நிலப்பகுதியின் மேல்பரப்பில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இமாலய பனிப்பாறைகள் வரலாறு காணாத அளவு உருகி கடல்மட்டம் அதிகரிக்க செய்கின்றன. காலநிலை அவசரநிலையால் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
பணக்கார நாடுகள் ஆதரவு: இந்த சூழலை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை திட்டங்கள் அவசரகதியில் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியா மென்மேலும் எதிர்கொள்ளவிருக்கும் காலநிலை சவால்களிலிருந்து மீள பணக்கார நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT