Published : 24 Apr 2024 04:06 AM
Last Updated : 24 Apr 2024 04:06 AM
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கோட்டையூர் சங்கரபாண்டியபுரம் பகுதிகளுக்கு இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டு பறவைகள் வலசை வரத் தொடங்கியுள்ளன. எனவே, இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள கண்மாய்களுக்கு வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் வருவது வழக்கம். கோட்டையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் கோட்டையூர் கண்மாய் மற்றும் சுற்றியுள்ள கிராமப் புறத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, தற்போது ஆஸ்திரேலியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து செங்கால் நாரை, கூழைக்கடா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இனப்பெருக்கத்துக்காக வலசை வந்துள்ளன.
பல ஆண்டுகளாக ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம் கிராமத்துக்கும் இந்த வகையான வெளி நாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இங்கு இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் குஞ்சுகளுடன் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன. வெளி நாட்டுப் பறவைகள் வருவதால், இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில்லை.
மேலும், இங்கு வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் ஆலமரம், புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஆனால், கோட்டையூர் கண்மாயில் குறைவான அளவே தண்ணீர் இருப்பதோடு, சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பறவைகள் வெம்பக்கோட்டை, ஆலங்குளம் போன்ற நீர்த்தேக்கங்களுக்கு உணவுக்காக சென்று வருகின்றன.
எனவே, இனப்பெருக்கத்துக்காக வலசை வரும் வெளி நாட்டுப் பறவைகளுக்காக கோட்டையூர் மற்றும் சங்கர பாண்டியபுரம் பகுதிகளில் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT