Last Updated : 23 Apr, 2024 04:14 AM

 

Published : 23 Apr 2024 04:14 AM
Last Updated : 23 Apr 2024 04:14 AM

கோதபாளையம் கிராம மக்களை கோடையில் இருந்து காக்கும் ஆலமரம்!

கோவை மாவட்டம் கோதபாளையம் கிராமத்தில் சாலையோரம் காணப்படும் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரம். படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில் கோவை மாவட்டம் கோதபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இரு நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரம், இயற்கை அன்னை அளித்த பொக்கிஷமாக அப்பகுதி மக்களால் மதிக்கப்படுகிறது.

சூலூர் வட்டத்தில் அமைந்துள்ளது கோதபாளையம் கிராமம். இங்குள்ள அரசு பள்ளி அருகே பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்களும் அவ்வழியே சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலானவர்கள் ஆல மரத்தடியில் சிறிது நேரம் இளைப்பாறி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மக்கள் நலன் கருதி அதே பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை, சரஸ்வதி ஆகியோர் ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து மக்கள் அனைவருக்கும் இலவச நீர்மோர் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி அண்ணாமலை கூறியதாவது: கோதபாளையத்தில் அமைந்துள்ள ஆலமரம் 200 ஆண்டுகள் பழமையானது. நான் சிறுவனாக இருந்தது முதல் இந்த மரத்தின் நிழலில் இளைப்பாறி வருகிறேன். தற்போது கோடை காலம் என்பதால் மக்களின் நலன் கருதி இலவச நீர் மோர் வழங்கி வருகிறேன். இஞ்சி உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் மோர் வழங்கப்படுகிறது. இதனால் ஊர் பொதுமக்கள், கோதபாளையம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என அனைவரும் பருகி செல்கின்றனர்.

வெயில் கடுமையாக இருந்தாலும் மோரை அருந்திவிட்டு மரத்தடியில் சிறிது நேரம் இளைப்பாறி சென்றால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும். வளர்ச்சிப் பணிகள் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பழமையான மரங்கள் தொடர்ந்து வெட்டி அகற்றப்படுகின்றன. வளர்ச்சி தேவைதான். இருப்பினும் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டியது அவசியம்.

ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைந்து மக்களுக்கு நீர்மோர் இலவசமாக வழங்கி வரும் அண்ணாமலை- சரஸ்வதி

அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். எதிர்வரும் காலங்களில் கோதபாளையம் கிராமத்தில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டாலும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற் கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x