Published : 23 Apr 2024 04:00 AM
Last Updated : 23 Apr 2024 04:00 AM
பொள்ளாச்சி: அம்பராம்பாளையத்தில் இருந்து சேத்துமடை வரை உள்ள சாலையை பசுமை பாரம்பரிய சாலையாக அறிவிக்க வேண்டும் என பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி யிலிருந்து மீன்கரை சாலையில் உள்ள அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரையிலான 16 கி.மீ., தொலைவுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இவை அந்த வழித்தடத்தில் பசுமையான மேற்கூரை போல் அமைந்துள்ளன. தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சின்னச்சாமி என்பவர் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்து 10 அடி தொலைவில் ஆயிரக்கணக்கான புளிய மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
இந்த புளிய மரங்களில் விளையும் புளியால் சுப்பேகவுண்டன்புதூர், தாத்தூர் உள்ளிட்ட 5 கிராம ஊராட்சிகளுக்கு தற்போது வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், தாத்தூர் சந்திப்பின் இருபுறமும் 200 மீட்டருக்கு இருவழிச் சாலை, விபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், 2.2 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள நெடுஞ் சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தாத்தூர் சந்திப்பில் உள்ள 27 புளிய மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த ஆனைமலை பொதுமக்கள் மரங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் மறுப்பு: பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா மரங்களை வெட்ட அனுமதி மறுத்தார். இந்நிலையில், நேற்று ஆனை மலையை சேர்ந்த மகாத்மா காந்தி ஆசிரமம், ஆலம் விழுதுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மரம் வெட்ட அடையாளம் காணப்பட்ட புளியமரங்கள் முன்பு திரண்டனர். மரங்களை வெட்ட தடை விதித்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை வழங்கினர்.
பின்னர், தன்னார்வ அமைப்பினர் பொதுமக்களிடம் பேசும் போது, “ஆனைமலை குன்றுகளின் பல்லுயிர் சூழலுக்கு காடுகளும், விலங்குகளும் கட்டாயம் என்பது போல் ஆனைமலை பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு சாலையோரம் உள்ள மரங்கள் முக்கியமானவை. இந்த மரங்களால் அம்பராம்பாளையம் - சேத்து மடை சாலை ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கிறது.
கடும் கோடை காலத்திலும் பசுமையான மேற்கூரை போல் உள்ளது. இந்த பசுமைச் சூழலைப் பாதுகாக்க, 60 ஆண்டுகளாக பராமரிக்கப் பட்டு வரும் மரங்கள் கொண்ட பொள்ளாச்சி - ஆழியார் சாலை, அம்பராம்பாளையம் - ஆனைமலை சாலை, வேட்டைக் காரன்புதூர் - சேத்துமடை சாலை, ஆனைமலை - நா.மூ. சுங்கம் சாலைகளை பாரம்பரிய சாலை களாக அறிவிக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT