Last Updated : 21 Apr, 2024 11:10 AM

1  

Published : 21 Apr 2024 11:10 AM
Last Updated : 21 Apr 2024 11:10 AM

சுட்டெரிக்கும் கோடை வெயில்: அரூரில் வறட்சியால் விவசாயம் பாதிப்பு

கடத்தூர் பகுதியில் வறட்சி காரணமாக பயிர் செய்யப்படாமல் கரம்பாக விடப்பட்ட விவசாய நிலங்கள். படம்: எஸ்.செந்தில்

அரூர்: கோடை வெயிலின் கடுமை, வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தொடர்ந்து 7-வது நாளாக 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தார் சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 104, 105, 106 டிகிரி பாரன் ஹீட் என வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பதால் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதில் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் கடந்த 3 நாட்களாக வெயிலின் அளவு 106 பாரன் ஹீட்டைக் கடந்து கொளுத்தி வருகிறது. இதனால் சாலையில் வெப்ப அலை வீசுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதமாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவும் நிலையில் தற்போது வெப்ப நிலையும் உயர்ந்துள்ளதால் விவசாய பயிர்கள், மரக்கன்றுகள் அனைத்தும் முழுவதும் காய்ந்து வருகின்றன.

ஆயிரக் கணக்கான இளம் தென்னங்கன்றுகள், பாக்கு கன்றுகள், வாழை உள்ளிட்டவை காய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. கோடை வெப்பத்தால் ஏற்படும் வெப்பச்சலன மழையை எதிர்பார்த்தபடி மக்கள் உள்ளனர். இது குறித்து விவசாயி குமரவேலன் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

விவசாயம் பாதிக்கப் பட்டு, பயிர்கள் முழுவதும் காய்ந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நடப்பட்ட தென்னை மற்றும் பாக்கு கன்றுகள் முழுவதும் காய்ந்து விட்டன. மரவள்ளிக் கிழங்கு, வாழை போன்றவற்றை பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x