Published : 18 Apr 2024 04:02 AM
Last Updated : 18 Apr 2024 04:02 AM
ஓசூர்: ஓசூரில் அரசு அலுவலகங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகளும், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், ஓசூர் நகரப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், நகரப்பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை அரசு அலுவலகங்களிலும் நிலவி வருவதால், அரசு ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அரசு அலுவலகங்களின் அத்தியாவசியத் தேவைக்குத் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ஓசூரில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளில் அரசு அனுமதித்துள்ள ஆழத்தை விட அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. இதனால், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டன.
அரசு அலுவலகங்களில் கழிப்பிடங்களுக்குச் செல்ல தண்ணீர் இல்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு, பணிகளை முழுமையாகச் செய்ய முடியாத நிலையுள்ளது. சில அலுவலகங்களில் விலை கொடுத்து தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப் பாட்டை போக்க குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT