Last Updated : 14 Apr, 2018 10:53 AM

 

Published : 14 Apr 2018 10:53 AM
Last Updated : 14 Apr 2018 10:53 AM

வாழ வைக்கும் முருங்கை!

 

மிழகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத விவசாய நிலங்கள், மானாவாரி அடிப்படையிலான நிலங்கள். இந்த வகை நிலங்களுக்கு முருங்கை ஏற்றது. ஒரு ஏக்கர் முருங்கையில், ஒரு விவசாயி சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு நிகர லாபம் எடுக்க முடியும். எப்படி?

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் தனிப் பயிராகவும், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் என்ற கணக்கில் சுமார் 25 லட்சம் மரங்களும் உள்ளன. முருங்கை, வறட்சியைத் தாங்கி வளரும் மரம். குறைந்த நீரில் அதிக மகசூல் எடுக்க முடியும். பொதுவாக ஒரு ஏக்கரில் 200 மரங்கள் நடப்படுகின்றன.

வட இந்தியா செல்லும் முருங்கை

முருங்கையிலிருந்து முருங்கைக் காய், முருங்கை இலை, முருங்கை விதை ஆகிய பொருட்கள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே நம் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய மருத்துவத் தன்மை கொண்ட பொருட்கள். பெரும்பான்மையான விவசாயிகள் முருங்கைக்காய் விளைவித்துச் சந்தையில் விற்பது வழக்கம். ஐப்பசி மாத மழைக்குப் பிறகு மார்கழியில் பூத்து, மாசி-பங்குனியில் அதிக அளவில் முருங்கைக் காய் சந்தைக்கு வருகிறது.

உற்பத்தி அதிகரிக்கும்போது விலை வீழ்ச்சி அடைகிறது. இதனால் விவசாயிகளுக்குச் சில நேரம், காய் பறித்துச் சந்தைக்கு எடுத்துச் செல்லும் செலவை ஈடுகட்டும் அளவுக்குக்கூட விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில் உற்பத்தி அதிகம் இருக்கும்போது வட மாநிலங்களில் குளிர்காலத்தின் தொடர்ச்சி என்பதால் அங்கு முருங்கை விளைவதில்லை. ஆகவே, முருங்கைக் காயை வட மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.

இலை தரும் விலை

இந்த ஆண்டு, சந்தையில் முருங்கை விலை 3 ரூபாய் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இது போன்ற நிலை, வருங்காலத்தில் ஏற்படாதிருக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

சந்தை விலை 20 ரூபாய்க்கும் கீழ் இருந்தால், காய்களைப் பறிக்கக் கூடாது. அது முற்றிய பிறகு, அதன் எடை கிலோ 400 ரூபாய்க்குக் குறையில்லாமல் விற்கும். முடிந்தவரை சீசனில் காய் உற்பத்தியைத் தவிர்க்க வேண்டும். அதற்கேற்றபடி, ‘புரூனிங்’ செய்யும் காலத்தைத் திட்டமிட வேண்டும்.

உலகின் பல நாடுகளுக்கு முருங்கை இலைப் பொடி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்குத் தரமான முருங்கை இலை வேண்டும். இந்த முருங்கை இலைக்கு, கிலோவுக்கு 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யலாம். சுமாரான நீர்ப் பாசனத்திலேயே மூன்று மாதத்தில் ஏக்கருக்குச் சுமார் 4 டன்வரை, முருங்கை இலை உற்பத்தி இருக்கும். இதை இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்தால், அதற்கேற்றபடி விலையையும் கூட்டலாம்.

குறைந்த நீரே போதும்

முருங்கை இலையைப் பொடி செய்ய, பச்சை இலையை ‘சோலார் டிரையரி’ல் உலர்த்த வேண்டும். இதன் மூலம் தரமான உலர்ந்த பச்சை நிறமுள்ள இலை கிடைக்கும். இந்த இலைக்குக் குறைந்தபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் கிடைக்கும். 12 கிலோ பச்சை இலையில், ஒரு கிலோ காய்ந்த இலை கிடைக்கும். அதாவது, ஒரு ஏக்கரில் ஆண்டுக்குச் சராசரியாக 12 டன் பச்சை இலையோ அல்லது 1 டன் காய்ந்த இலையோ கிடைக்கும். ஒரு விவசாயி 3 ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிட்டிந்தால், ஒரு சோலார் டிரையர் சொந்தமாக நிறுவி 6 லட்சம் ரூபாய்வரை வருமானம் பார்க்கலாம்.

ஒரு ஏக்கர் நெல்லுக்கு வேண்டிய நீரில் 100 ஏக்கர் முருங்கை பயிரிட்டுவிடலாம். நீர்ப் பற்றாக்குறை உள்ளதால் பயிரை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். முருங்கை விவசாயத்தின் மூலம், பெரும்பான்மையான விவசாயிகள் சிறப்பாக வாழலாம்.

‘ஒரு முருங்கை மரமும் பசுவும் போதும், ஏழை வாழ்வு நிறைஞ்சு போகும்’ என்பது ஒரு திரைப் பாடல் வரி. ஏழை வாழ்க்கை மட்டுமல்ல… எல்லா விவசாயிகளின் வாழ்வும் நிறைய முருங்கை வழிசெய்யும்!

கட்டுரையாளர் தொடர்புக்கு: mak@makindia.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x