Published : 15 Apr 2024 04:02 AM
Last Updated : 15 Apr 2024 04:02 AM
முதுமலை: முதுமலை பகுதியில் செந்நாய்களுக்கு தோல் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு, இதுகோடை காலத்தில் இயற்கையானது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரக பகுதியில் செந்நாய்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செந்நாய்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண் ஆகியோரின் உத்தரவின்படி, 5 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், பொக்காபுரம் பகுதியில் 7 செந்நாய்கள் உள்ள கூட்டத்தில், நான்கு செந்நாய்களுக்கு தொற்று நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
துணை இயக்குநர் அருண், வனக்கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர், தொற்று நோய் பாதிக்கப்பட்ட செந்நாய்கள் இருந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘‘இவ்வகையான நோய், கோடை காலத்தில் செந்நாய்களுக்கு ஏற்படும். கோடை காலம் முடியும்போது, தானாகவே இந்நோய் குணமாகிவிடும். இந்த நோய் பாதிப்புக்குள்ளான செந்நாய்களை, கடந்த காலங்களில் கள பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
பொதுவாக, வறட்சியான காலங்களில் செந்நாய்களுக்கு தொற்று ஏற்படும். வெயில் தாக்கம் குறையும்போதோ அல்லது மழை பெய்தவுடனோ தொற்று சரியாகிவிடும். மேலும், வேறு ஏதேனும் பகுதியில் செந்நாய்களில் இந்நோய் பரவியுள்ளதா என கண்டறிய தனி குழுக்கள் அமைக்கப் பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. வளர்ப்பு நாய்களிடம் இருந்துவன விலங்குகளுக்கு இந்நோய் பரவுவதை தடுக்க, மூன்று மாதங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியிலுள்ள வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பாதிக்கப்பட்ட செந்நாய் கூட்டத்தை, தனிக் குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று பாதிக்கப்பட்ட செந்நாய் கூட்டமானது, எந்த ஒரு தொய்வுமின்றி நன்றாக வேட்டையாடு கின்றன. இவ்வாறு வெயிலில் நன்கு திரிந்து வேட்டையாடி உணவு உண்டாலே, இந்த தொற்று குறைந்து விடும். எனினும், இந்த செந்நாய் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT