Published : 12 Apr 2024 04:00 AM
Last Updated : 12 Apr 2024 04:00 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலங்களில் குடிநீர் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட கிணறுகளை தூர்வாரி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கி பருகும் நிலையுள்ளது. அதேபோல, அத்தியாவசியத் தேவைக்கும் டிராக்டர்களில் கொண்டு வரப்படும் நீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை நிலவுகிறது. தண்ணீர் பிரச்சினையால் வாடகை வீடுகளில் வாடகையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர்.
இதனால், நடுத்தர மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிரச்சினையைப் போக்க மாநகராட்சி நிர்வாகம் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தற்காலிகமாக டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுடன், புதிய ஆழ்த்துளைக் கிணறு அமைக்கும் பணியும் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ஏற்கெனவே கடந்த காலங்களில் குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட பழைய கிணறுகளை தூர்வாரி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், சுகாதாரம், குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. குறிப்பாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதற்கு தற்காலிக தீர்வை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
கடந்த காலங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க ராம நாயக்கன் ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டன. அதில் பல கிணறுகளை தற்போது காணவில்லை. அதேபோல, பேரண்டப்பள்ளி சின்னாற்றில் 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
பின்னர் மோட்டார்கள் பழுதால் அதனையும் கண்டு கொள்ளவில்லை, மேலும், குருப்பட்டியில் மத்திய அரசு நிதியிலிருந்து ஆயிரம் அடியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் கிடப்பில் உள்ளது. ஏற்கெனவே குடிநீர் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட கிணறுகளை முறையாக பராமரித்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போதைய தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு, குருப்பட்டி ஆழ்துளைக் கிணறு, சின்னாற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் ராம நாயக்கன் ஏரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்து, தூர்வாரி தண்ணீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT