Published : 12 Apr 2024 04:02 AM
Last Updated : 12 Apr 2024 04:02 AM

தாய் யானைக்கு சிகிச்சை: பாசப் போராட்டம் நடத்தும் குட்டி யானை @ சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அருகில் அதன் குட்டி யானை.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடையின் தாக்கத்தால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வனப் பகுதியில் உள்ள குளம் குட்டைகள் வறண்டு காணப்படுவதால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வனப்பகுதியில் அதிகளவில் வசிக்கும் யானைகள், நீர் மற்றும் உணவு தேடி சமவெளிப் பகுதிக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை சத்திய மங்கலம் வனச்சரகம், பண்ணாரி பிரிவு, வடவள்ளி புது குயனூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அடர்ந்த வனப்பகுதியில், ஒரு பெண் யானை வெயிலின் தாக்கம் காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் கீழே படுத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அந்த பெண் யானை அருகே, அதன் இரண்டு வயது குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளிறியபடியே பாசப்போராட்டம் நடத்தி வந்தது. இதைக் கண்ட வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளித்தனர். மருத்துவக் குழுவினர் அங்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானைக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர். பெண் யானையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்த வனத்துறையினர், குட்டி யானையை மீட்டு பராமரித்து வருகின்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கடம்பூர் வனப் பகுதியில் பள்ளத்தில் விழுந்த யானை உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில், தற்போது சத்தி வனப்பகுதியில் பெண் யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x