Published : 10 Apr 2024 04:12 AM
Last Updated : 10 Apr 2024 04:12 AM
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து, துர்நாற்றம் போன்றவற்றுக்கு மாநகராட்சி நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் 253 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பை கொட்டப்படுகிறது. குப்பைக் கிடங்கின் வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. 10 ஏக்கரில் தீ பிடித்து, பல டன் குப்பை எரிந்துள்ளது. மாநகராட்சியின் மெத்தன நடவடிக்கையே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்துள்ளன.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, ‘‘வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை மாநகராட்சி முறையாக பின்பற்றவில்லை. தரம் பிரிக்கப்படாமலேயே குப்பைக் கிடங்குக்கு குப்பை கொண்டு வரப்படுகிறது. பயோ மைனிங் திட்டத்தையும் விரைவுபடுத்த வேண்டும். குப்பையை அழிப்பதற்கான திட்டங்களை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.
குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக் குழு செயலாளர் கே.எஸ்.மோகன் கூறும்போது, ‘‘தீ விபத்துகளை தடுக்க முன்னரே மாநகராட்சி நிர்வாகம் தயாராக இருந்திருக்க வேண்டும். குப்பையின் மீது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை தண்ணீரை தன்னிச்சையாக தெளிக்கும் வகையில் ‘ஸ்பிரிங்ளர்’ பொருத்த வேண்டும். தடுப்பு மருந்துகள் தொடர்ச்சியாக தெளிக்க வேண்டும். குப்பைக்கிடங்கில் இருந்து வீசும் துர் நாற்றத்தாலும், தீப்பிடித்தால் ஏற்படும் புகை மூட்டத்தாலும் சுற்றுப்புறப் பகுதிகளில் மக்கள் சிரமத்துக் குள்ளாகின்றனர்’’ என்றார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறும்போது, ‘‘14 தீயணைப்பு ஊர்திகள், தனியார் தண்ணீர் லாரிகளை பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது’’ என்றார்.
சமூக செயல்பாட்டாளர்கள் கூறும் போது, ‘‘குப்பைக் கிடங்கில் முறையான தடுப்பு நடவடிக்கை இல்லாததால் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கை யாகிவிட்டது. தற்போது குப்பைக்கிடங்கில் பிடித்த தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சனிக்கிழமை மாலை முதல் மறுநாள் மதியம் வரை கடுமையாக காற்று மாசு ஏற்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கோணவாய்க்கால் பாளையம், கஞ்சிக்கோணாம்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட 5 இடங்களில் காற்றின் தரம் கண்டறியும் கருவி பொருத்தப் பட்டுள்ளது’’ என்றனர்.
மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘‘குப்பைக் கிடங்கில் பிடித்த தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகையை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைபோல் குவிந்துள்ள குப்பை, பகுதி பகுதியாக பிரிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்கவும், தீ விபத்தை தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும்’’என்றார்.
மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, ‘‘குப்பைக்கிடங்கில் தீயணைப்பு ஊர்தி தயார் நிலையில் உள்ளது. வார்டுகளில் தரம் பிரித்து குப்பை சேகரிப்புப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தரம் பிரித்து சேகரிப்பதால் குப்பைக்கிடங்குக்கு வரும் குப்பையின் அளவு குறைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment