Published : 09 Apr 2024 04:02 AM
Last Updated : 09 Apr 2024 04:02 AM
சேலம்: சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போதே உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை பாதுகாக்க, நீர் தெளிப்பான்கள், குளிர் சாதன வசதி உள்பட சிறப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற் கொண்டுள்ளனர்.
கோடை காலம் தொடங்கும் முன்னரே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, மார்ச் மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம், கோடையின் உச்ச காலமான அக்னி நட்சத்திர காலம் போல, அனலடித்துக் கொண்டுள்ளது. கடந்த இரு நாட்களாக 107 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக, வெயிலின் தாக்கம் இருக்கிறது.
அனலடிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, பகல் நேரத்தில் திறந்தவெளியில் நடமாடுவதை குறைத்துக் கொண்டுள்ள மக்கள், இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறு ஆகியவற்றை அருந்தி, வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் குரும்பப் பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை, வெயிலின் தாக்கத்தில் இருந்து, பாதுகாக்கும் வகையில், வனத் துறை சார்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலம் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறியது: சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. எனவே, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பூங்காவினுள் வேலிக்கு உட்புறம் திறந்த வெளியில் உலாவக்கூடிய புள்ளி மான்கள், கட மான்கள் ஆகியவை திரண்டு நிற்கும் இடங்களில், தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மூலம் மான்கள் மீது மழைத்தூறல் போல நீர் தெளிக்கப்படுகிறது.
வெயிலில் உலாவும் மான்கள், தெளிப்பான்கள் இருக்கும் இடத்துக்கு வரும்போது, அவற்றுக்கு குளிர்ச்சியான நிலை கிடைக்கிறது. ஏற்கெனவே, 20 எண்ணிக்கையில் தெளிப் பான்கள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 10 தெளிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. மான்களுக்கான குடிநீர் தொட்டிகளில் அவ்வப்போது நீர் நிரப்பி, தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கண்காணித்து வருகிறோம். இதேபோல், 5 வெள்ளை மயில்கள் உள்பட 18 மயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மயில்கள் பராமரிக்கப்பட்டு வரும் வளாகத்தின் மேற்கூரையில் குளிர்ச்சியான பனி நிலவுவதைப் போன்ற சூழலை உருவாக்க, குளிர் சாதன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வெளி நாட்டு பறவைகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படும் வளாகங்களின் சுற்று வேலியின் மீது சாக்குகள் போர்த்தப்பட்டு, அவற்றின் மீது அவ்வப்போது நீர் தெளித்து வைப்பதால், சுற்றுப்புற வெப்பம் பறவைகளை தாக்காமல் தடுக்கப் படுகிறது. வன விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வரும் வளாகத்தில் எப்போதும் போதுமான அளவு நீர் இருக்கும் வகையில், அவ்வப்போது நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும், குரங்கு, நரி உள்பட வன விலங்குகளுக்கு தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி உள்பட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உணவாக வழங்கப் படுகிறது. பூங்காவில் உள்ள வன ஊழியர்களைக் கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகள், பறவைகள், பாம்புகள் உள்பட அனைத்தும் தொடர் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளன, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT