Published : 30 Mar 2024 05:49 AM
Last Updated : 30 Mar 2024 05:49 AM
உடுமலை: கொளுத்தும் கோடை வெயிலிலும் 1.7 டிஎம்சி நீருடன் கடல்போல் காணப்படும் திருமூர்த்தி அணை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 1.9 டிஎம்சி கொள்ளளவும், 60 அடி உயரமும் கொண்டது. பிஏபி தொகுப்பணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு, பின்னர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதுதவிர உடுமலை நகராட்சி, மடத்துக்குளம், கணக்கம்பாளையம், குடிமங்கலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக, சுமார் 10 லட்சம் பேரின் குடிநீர் தேவையையும் திருமூர்த்தி அணை பூர்த்தி செய்து வருகிறது.
திருமூர்த்தி அணை நீரின் சுவையை கருதியே, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. பிஏபி பாசன விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிஏபி பாசனத்துக்குட்பட்ட முதல் மண்டலத்திலுள்ள 94,000 ஏக்கர் பயன்பெற வேண்டி, 2-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது முதல் மண்டல விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை நகராட்சி மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்காக, தினமும் விநாடிக்கு 21 கன அடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
காண்டூர் கால்வாயில் இருந்து அணைக்கு விநாடிக்கு 704 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 916 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 1.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் பிஏபி தொகுப்பணைகளுக்கும் போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும், இருக்கும் நீரை குடிநீர் தேவைக்கும், பாசன தேவைக்கும் பங்கிட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கொளுத்தும் கோடை வெயிலில் பல நீர் நிலைகள் வறண்டு, பாலைவனம்போல் காணப்படுகிறது. இந்நிலையிலும், திருமூர்த்தி அணையில் நேற்றைய நிலவரப்படி 1.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கோடையில் அதிகரிக்கும் வெயிலை சமாளித்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT