Published : 27 Mar 2024 12:04 AM
Last Updated : 27 Mar 2024 12:04 AM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்ற வலியுறுத்தி, நீரேற்று நிலையத்தில் ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றினை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள் மூலம் கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் பெறப்பட்டு வருகிறது. பவானியாற்றில் சாமன்னா நீர் ஏற்று நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது.
அதற்கு கீழ் பகுதியில், கிராம ஊராட்சிகளுக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக ஏற்கனவே பவானியாற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் திருப்பூர் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஆற்றின் நடுவே மண் மற்றும் கற்களை கொட்டி ஆற்று நீரை மறிக்கும் வகையில் தடுப்பு அமைக்க பட்டதால், அதற்கு கீழ் பகுதிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் முற்றிலும் தடைபட்டதாக தெரிகிறது.
இதனால் கீழ் பகுதியில், உள்ள கிராம ஊராட்சிகளின் குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் முழுவதும் தடைபட்டது. பள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை, சின்னகள்ளிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள செயற்கையான தடுப்பை அகற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று ( மார்ச் 26) திருப்பூர் குடிநீர் திட்ட நீரேற்று நிலைய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தடுப்பின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “பவானியாற்றில் நீர் எடுக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் ஒருபகுதி அகற்றப்பட்டுவிட்டது. தற்போது தண்ணீர் சென்று வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT