Published : 23 Mar 2024 03:08 PM
Last Updated : 23 Mar 2024 03:08 PM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீரின்றி மார்க்கண்டேயன் நதி, குப்தா ஆறு வறண்டு காட்சியளிப்பதால், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையான முத்தியால்மடுகு என்ற மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறு, சிறு ஓடைகள் இணைந்து மார்க்கண்டேயன் நதி உருவாகிறது. இந்த நதியில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மம்மா ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் கலக்கிறது. இதே போல் குப்தா ஆறும், நீர் ஆதாரமாக உள்ளது. நதி மற்றும் ஆறு பாலனப்பள்ளி, சிங்கரிப்பள்ளி, மாரசந்திரம், குருபரப்பள்ளி வழியாகச் சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
படேதலாவ் ஏரிக்கு: இந்த நதியின் குறுக்கே, குப்பச்சிபாறை - மாரச்சந்திரம் இடையே தடுப்பணை கட்டப் பட்டுள்ளது.இந்த தடுப்பணையில் இருந்து மாரசந்திரம், ஜீ னூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், வீரோஜிபள்ளி, நெடுமருதி, திப்பனப்பள்ளி, பண்டப்பள்ளி, கொத்தூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்தமலை வழியாக கல்லுகுறி வந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை (பெரிய ஏரி) வந்தடைகிறது.
100 கிராமங்களில் நீர்மட்டம் சரிவு: இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்கண்டேயன் நதியும், குப்தா ஆறும் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிப்பதால், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழையின்மை: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கர்நாடகாவில் யார்கோல் அணை கட்டியபிறகும், கடந்த 3 ஆண்டுகளாக மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து இருந்தது. இதனால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரி பாசன விவசாயிகளும் பயன்பெற்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்டத்தில் போதிய மழை பொழிவு இல்லாததால், தற்போது வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
சிறு, சிறு தடுப்பணைகள்: இதனால், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மழைக்காலங்களில் உபரி நீரை சேமிக்கும் வகையில் சாத்தியமுள்ள இடங்களில் ஆய்வு செய்து, சிறு, சிறு தடுப்பணைகள் கட்டினால் மழைநீர் அதிகளவில் சேமிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம், குடிநீர் பிரச்சினை இருக்காது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT