Published : 19 Mar 2024 04:02 AM
Last Updated : 19 Mar 2024 04:02 AM

கோடைக்கு முன்பே குன்னூரில் தண்ணீர் பற்றாக்குறை அபாயம்

நீர்மட்டம் குறைந்து காணப்படும் குன்னூரின் ரேலியா அணை.

குன்னூர்: கோடை தொடங்குவதற்கு முன்னரே குன்னூரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் ரேலியா அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. 43.7 அடி உயரம் கொண்ட இந்த அணை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்துதான் குன்னூரில் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அணையின் நீர்மட்டம் 42 அடியாக இருந்தது. தற்போது, வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இது மட்டுமின்றி பாரஸ்ட்டேல் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ரேலியா அணையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் எடுத்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதால், அணையில் நீர் இருப்பு 36 அடியாக குறைந்துவிட்டது. மேலும், குன்னூருக்கு எமரால்டு அணையிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரும், அணையில் தண்ணீர் இருப்பு குறைந்தது காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. குன்னூர் நகருக்கு கரன்சியிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மழையின்மை காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதால், கரன்சி பகுதியிலுள்ள காட்டாறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், குன்னூர் நகருக்கான தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், கோடை சீசனுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி யுள்ளது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க குடிநீர் விநியோகம் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை மழை பெய்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்று, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x