Published : 14 Mar 2024 09:07 PM
Last Updated : 14 Mar 2024 09:07 PM

தூத்துக்குடியில் ரூ.11.30 கோடியில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடக்கம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.11.30 கோடி மதிப்பில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்வளத்தை பெருக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில், 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவ, தமிழ்நாடு அரசு ரூ.62 கோடி ஒதுக்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய 5 மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் ரூ.11.30 கோடி அமைக்கப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக தருவைகுளத்திலிருந்து கடல்மார்க்கமாக சிங்கித்துறை மீனவக் கிராமத்துக்கு செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டுசெல்லும் பணி தொடங்கியது. தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை வகித்தார்.

சட்டபேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலை வகித்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசுகையில், “முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை மீனவக் கிராமத்தில் ஆறு இடங்களில் செயற்கைப் பவளப்பாறை அமைக்கும் பணி தருவைக்குளம் மீன் இறங்குதலத்தில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இந்த மாதம் 31-ம் தேதிக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் பளைப்பாறைகளில் மீன்குஞ்சுகள் அதிக அளவில் உற்பத்தியாகி மீன்வளம் பெருகும். கடல் மீன் உற்பத்தி அதிகரிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்” என்றார்.

இதில், மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் வீ.ராஜூ, உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், உதவிப் பொறியாளர் தயாநிதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x