Published : 12 Mar 2024 12:20 PM
Last Updated : 12 Mar 2024 12:20 PM
மதுரை: மதுரை வெளிவட்டச் சாலைப் பணிக்காக தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக வன விலங்குகளுக்கான மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதே பகுதியில் வண்ணாத்திக் கரடு மலையில் தற்போது குவாரி அமைக்க வருவாய்த் துறை அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வண்ணாத்திக்கரடு, வகுத்தமலை குன்றுகள் உள்ளன. ஒரே தொடர்ச்சியாக இருந்த இந்த இரு மலைகளுக்கும் நடுவே பாறையைக் குடைந்து தா.வாடிப்பட்டி-சிட்டம்பட்டி இடையே மதுரை வெளிவட்டச் சாலைப் பணிகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மலைகளுக்கு இடையே சாலை அமைக்கப்படுவதால் காட்டுயிர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வன விலங்குகள் சாலையைக் கடக்கும் வகையில் இரு மலைகளையும் இணைத்து மேம்பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது.
தா.வாடிப்பட்டி வட்டத்துக் குட்பட்ட கொண்டையம்பட்டி ஊராட்சியில் உள்ள வண்ணாத் திக்கரடு வருவாய்த் துறையின் கீழ் உள்ளது. மற்றொரு புறம் உள்ள வகுத்தமலை வனத்துறையின் கீழ் உள்ளது. ஒருபுறம் வனவிலங்குகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மேம்பாலம் அமைக்கும் நிலையில் மற்றொரு புறம் உள்ள வண்ணாத்திக்கரடு மலையை உடைத்து கல்குவாரி அமைக்கும் உரிமத்தை வருவாய்த் துறை கடந்த மாதம் வழங்கியிருக்கிறது. வருவாய்த் துறையின் இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், அப்பகுதி கிராம மக்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
இது குறித்து மதுரை இயற்கை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தமிழ்தாசன் கூறியதாவது: ‘‘வண்ணாத்திக் கரடு மலையில் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தினமும் மலையை உடைத்துக் கொண்டுள்ளனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் வன விலங்குகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க வண்ணாத்திக் கரடு - வகுத்தமலை இடையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் அமைக்கிறது. ஆனால் அருகிலேயே குவாரி செயல்பட வருவாய்த் துறை அனுமதி வழங்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
வன விலங்குகளின் இடம் பெயர்வு பாதிக்கும் என்பதால் தான் மலைக்கு குறுக்காக சாலை அமைக்க முதலில் வனத்துறை அனுமதி மறுத்தது. பின்னர் அதற்காகத்தான் விலங்குகளுக்கான மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் தற்போது வண்ணாத்திக்கரடில் குவாரி செயல்படுவதால் இயற்கை வளத்துக்கும் வன விலங்குகள் வாழ்விடத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும்.
வண்ணாத்திக் கரடு மலைப் பகுதிக்கு வகுத்தமலையில் இருந்து வன விலங்குகள் இடம்பெயர்வு இருப்பதால் வண்ணாத் திக்கரடு மலைப் பகுதியையும் வருவாய்த் துறை வசமிருந்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வண்ணாத்திகரடு பகுதியில் நரி, தேவாங்கு. பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்கள் அதிகம் வாழ்கின்றன. வகுத்தமலையே சிறுமலையின் தொடர்ச்சிதான். இரு மலைகளையும் சாத்தையாறு கணவாய் பகுதிதான் பிரிக்கிறது. வகுத்தமலையிலும் அதிகம் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
ஆனால் வண்ணாத்திக் கரடு மலையில் குவாரி அமைக்க லாப நோக்கில் அனுமதி கொடுத் துள்ளனர். வகுத்த மலையில் தோன்றும் 4 மலை ஓடைகள் வண்ணாத்திக் கரட்டின் கிழக்கு திசை வழியே பயணித்து தனிச்சியம் கண்மாய்க்கு செல்கிறது. அதில் ஒரு ஓடையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை பணியின்போது பாலம் அமைக்காமல் மண்ணைக் கொட்டி அதன் பாதையை அடைத்து விட்டனர். இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறுகளைச் செய்தால் பாதிக்கப்படப்போவது மனிதர்கள் தான்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT