Published : 12 Mar 2024 04:02 AM
Last Updated : 12 Mar 2024 04:02 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க 27 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை குறைந்து, செடி கொடிகள், புற்கள், மரங்கள் காய்ந்து வருகின்றன. கடந்த சில நாட்ளாக அவ்வப் போது காய்ந்த சருகுகளில் தீப் பற்றி, அடுத்தடுத்த பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் ஏராளமான அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன. வனத்துறை சார்பில் காட்டுத் தீ ஏற்படும் சூழல் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேல்பள்ளம், வடகவுஞ்சி, புலத்தூர், பண்ணைக்காடு, கெங்குவார்பட்டி முதல் வத்தல குண்டு வரையுள்ள வனப்பகுதியில் மொத்தம் 27 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனச்சரகர் குமரேசன் கூறுகையில், வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து தடுக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. மேலும் தீ பரவுவதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தீ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பரவாமல் தடுக்க முடியும். விவசாயிகள், தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் வனத்துறை அனுமதியின்றி பட்டா இடங்களில் தீ வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டுத் தீ குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறாம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT