Published : 05 Mar 2024 07:03 PM
Last Updated : 05 Mar 2024 07:03 PM
மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் நிலப்பரப்பில் பறவைகள் கணக்கெடுப்பில் 48 வகை பறவையினங்களை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
தமிழக வனத்துறை சார்பில் ஈரநிலப்பரப்பு மற்றும் நிலப்பரப்பு பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 மற்றும் 3ம் தேதி நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டூர் வனச்சரகத்தில் பாலமலை, நீதிபுரம், வனவாசி, சோளப்பாடி ஆகிய இடங்களில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் தொலை நோக்கி மூலம் பார்த்து பதிவு செய்தும், நவீன கேமராக்கள் கொண்டு, பறவைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பறவைகள் கணக்கெடுப்பு முடிந்த நிலையில், நிலப்பரப்பு பறவையினங்கள் பட்டியலை வனத்துறையினர் தயாரித்தனர். இதில், மேட்டூர் வனப்பகுதியில் 48 வகை பறவையினங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதும் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மேட்டூர் வனச்சரக அதிகாரிகள் கூறியதாவது: "மேட்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட 4 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் வெண்பிடரி பட்டாணி குருவி, சாம்பல் இருவாச்சி, அரசலால் ஈபிடிப்பான், மாம்பழ சிட்டு, நீலக்கண்ணி, சைக்கீசு கதிர்குருவி, சின்ன மின் சிட்டு உள்ளிட்ட அரிய வகை மற்றும் வழக்கமான பறவையினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.தாரமங்கலம் நடுநிலைப்பள்ளி ஆசிரியரும், பறவைகள் ஆர்வலருமான செந்தில்குமார் சோளப்பாடி பகுதியில் வெண்பிடரி பட்டாணி குருவி பார்த்து பதிவு செய்தார். இந்த பறவை கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் காணப்படும் நிலையில், தென்னிந்தியாவில் கர்நாடக, தமிழகத்தில் மட்டுமே காணமுடியும். குறிப்பாக, தமிழகத்தில் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரகத்தில் மட்டுமே தான் உள்ளது.சாம்பல் இருவாச்சி பறவை, சேலத்தில் மேட்டூர் வனப்பகுதியில் மட்டும் அதிகளவில் பார்க்க முடியும். அதேபோல், அரசலால் ஈபிடிப்பான் பறவை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டுமே தான் பார்க்க முடியும். தற்போது, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியான மேட்டூர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் தான் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும்.
சைக்சீசு கதிர்குருவி குளிர்காலத்தில் இந்தியா, இலங்கையில் பார்க்க முடியும். பின்னர், இனப்பெருக்கத்திற்காக ஜரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்லும். தற்போது, இனப்பெருக்கத்திற்கு செல்லும் போது, மேட்டூர் பகுதியில் பார்க்க முடிந்தது", என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT