Published : 05 Mar 2024 09:00 AM
Last Updated : 05 Mar 2024 09:00 AM
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட பெண் யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் 2 மாதமான குட்டி, தாயைச் சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே, நேற்று முன் தினம் இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத தாய் யானை, அப்பகுதியில் உள்ள வனத்தில் மயங்கி விழுந்தது. இதைப்பார்த்த அதன் குட்டி யானை, தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர். 40 வயதான தாய் யானை, வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது. யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும் போது, 2 மாதமே ஆன, அதன் குட்டி யானை சுற்றி வந்து பிளிறியபடியே இருந்தது.
பண்ணாரி சாலையின் அருகில், இந்த சம்பவம் நடந்த நிலையில், குட்டி யானை சாலைப் பகுதிக்குச் சென்று, வாகனத்தில் அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, வனத் துறையினர் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் குட்டி யானையை இறக்கி, பாதுகாத்து வருகின்றனர். குட்டி யானைக்குத் தேவையான பால் மற்றும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. தாய் யானைக்கு சிகிச்சை தொடர்ந்து வரும் நிலையில், அதனை விட்டு பிரிய முடியாமல், குட்டி யானையின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து இரண்டு யானைகள் திடீரென வெளியேறி, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத் துறையினர் உடனடியாக பட்டாசுகளை வெடித்து அந்த யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT