Published : 05 Mar 2024 04:00 AM
Last Updated : 05 Mar 2024 04:00 AM

தருமபுரி கிராமத்தில் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் அச்சம்

தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள வேடப்பன் திட்டு பகுதியில் வயல் வெளியைக் கடந்து செல்லும் ஒற்றை ஆண் யானை.

தருமபுரி: தருமபுரி அருகேயுள்ள கிராமத்துக்குள் ஒற்றை ஆண் யானை நுழைந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரக பகுதியில் முகாமிட்டு விளைநிலங்களில் நடமாடி வந்த ஒற்றை ஆண் யானை பின்னர் காரிமங்கலம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அங்கு, 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் யானை தாக்கியதில் ஜெயஸ்ரீ என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கரும்பு வயலில் முகாமிட்டிருந்த யானையை வனப் பகுதிக்கு இடம் பெயரச் செய்ய வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், இந்த யானை நேற்று முன்தினம் தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையைக் கடந்து சோலைக் கொட்டாயை அடுத்த மான்காரன் கோட்டை பகுதியை அடைந்தது. இப்பகுதியில் விவசாயிகள் நடவு செய்துள்ள தீவனப்பயிர் வயல்களிலும், கரும்பு வயல்களிலும் முகாமிட்டது. அன்றிரவு யானையை வனத்துக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் வெடி வெடித்தும், ஓசையெழுப்பியும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யானை இடம் பெயரவில்லை. யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா உதவியுடன் வனத் துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அன்றிரவு தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிக்கு பின் பகுதியில் உள்ள சிறுவனப் பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நடமாடியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் விரட்ட முயன்றபோது சனத்குமார நதியையொட்டியுள்ள நாணல் புதருக்குள் நுழைந்தது. எனவே, வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்து வருகின்றனர். தருமபுரியையொட்டியுள்ள பகுதிகளில் ஒற்றை யானை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘மயக்க ஊசி செலுத்தியோ அல்லது நடக்கச் செய்தோ, யானைகள் வசிக்கும் வனப்பகுதிக்குள் ஒற்றை யானையை சேர்ப்பிக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே பெண் ஒருவரை தாக்கியதால் பலத்த காயம் அடைந்துள்ளார். இது தவிர, மின் பாதைகள் அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடும் போது யானைக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களுக்கும், யானைக்கும் ஆபத்து நேராத வகையில் அடர் வனப் பகுதிக்கு இடம் பெயரச் செய்ய வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x