Published : 03 Mar 2024 04:18 AM
Last Updated : 03 Mar 2024 04:18 AM
அரூர்: போதிய மழை இல்லாததால் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில்கடந்த பருவமழை சீசனில் சராசரி மழையளவை விட ( 950 மி.மீ. ) குறைவாகவே ( 700 மி.மீ. ) மழை பெய்துள்ளது. முந்தைய சீசனில் பெய்த மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள். விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருந்தது. விவசாய பணிகளும் முழுமையான நடைபெற்றன. ஆனால், கடந்த சீசனில் போதிய அளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகிறது.
அரூர் பகுதியில் உள்ள வள்ளி மதுரை, வாணியாறு அணைகளில் பாதிக்கும் குறைவாகவே நீர் மட்டம் உள்ளது. இதனால் பாசனத்துக்கு கூட நீர் திறக்க முடியாத நிலை உள்ளது. நீர் மட்டம் குறைந்துள்ளதால் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படாமல் நிலங்கள் தரிசுகளாக விடும் சூழல் நிலவி வருகிறது. கால் நடைகளுக்கான தீவனம் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் உருளைகளை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் புதியதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதே கோடை வெயில் கொளுத்தி வருவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் இருந்து வரும் கூட்டுக் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால் குடிநீர் பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் சுந்தர் கூறியதாவது: கிராமப் பகுதிகளில் குடிநீர்பற்றாக்குறையை தடுக்கும் பொருட்டு வாய்ப்புள்ள இடங்களில் போர்வெல் கிணறுகள் அமைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக போதியளவு மழை பெய்ததால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாலை, மின் விளக்குகள், கட்டுமானப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கிய அளவுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைப் பதிலும், பழுதானவற்றை சரிசெய்யவும்போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. இதில் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, அரூர் கோட்டப் பகுதிகளில் குடி நீர் பற்றாக்குறை ஏற்படும் கிராமப் பகுதிகள் குறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் கணக்கெடுத்து உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், குடிநீர் பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT