Published : 03 Mar 2024 04:20 AM
Last Updated : 03 Mar 2024 04:20 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 57 குளங்களில் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 24,207 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.
தாமிரபரணி மற்றும் அவற்றின் கிளை ஆறுகளான சிற்றாறு, பச்சையாறு, கடனா மற்றும் ராமநதி ஆகியவை தென்மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. இந்த ஆறுகளில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப் பணைகளின் துணையோடு கால்வாய்கள் மூலம் பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து உள்ளது.
இந்த குளங்கள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன் ஆயிரக்கணக்கான உள்ளூர் பறவைகளுக்கு ஆண்டு முழுவதற்கும் மற்றும் ஆயிரக்கணக்கான வலசை பறவைகளுக்கு குளிர் காலத்திலும் முக்கிய வாழிடமாக திகழ்கின்றன. தாமிரபரணி பாசன குளங்களில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 40 சிற்றினங்கள் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளாகும்.
தென் மாவட்டங்களில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் திருப்புடை மருதூர் பறவைகள் காப்பகம் ஆகியவை பறவைகளுக்கான முக்கிய வாழிடங்கள். இந்நிலையில் பறவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் குளங்களை ஆவணப்படுத்தவும், பறவைகள் மற்றும் குளங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மணிமுத்தாறில் செயல்படும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையமானது கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தாமிரபரணி பறவை கள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
14-வது கணக்கெடுப்பு: அந்த வகையில் 14-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 16,17,18-ம் தேதிகளில் நடைபெற்றது. அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், முத்துநகர் இயற்கை கழகம், நெல்லை இயற்கை சங்கம், திருநெல்வேலி புஷ்பலதா பள்ளி ஆகியவை இணைந்து இப்பணியை மேற்கொண்டன. இப்பணிகளை தாமிரபரணி வடிநில கோட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.
150 தன்னார்வலர்கள் 7 குழுக்களாக பிரிந்து திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 57 குளங்களில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இதில் 66 சிற்றினங்களை சேர்ந்த 24,207 பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் கூறியதாவது: அதிகபட்சமாக கொக்கின பறவைகள் 4,861 என்ற எண்ணிக்கையிலும், வலசை வாத்தின பறவைகளான ஊசிவால் வாத்து, வரித்தலை வாத்து, நாமத்தலை வாத்து போன்றவை 4,245 என்ற எண்ணிக்கையிலும் பதிவாகியிருந்தன. நீர் காக்கை இனங்கள் 3,039 என்ற எண்ணிக்கையில் பதிவாகியிருந்தது.
நீலச்சிறகு வாத்து: திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் வெளிநாட்டு பறவையான நீலச்சிறகு வாத்து கண்டறியப்பட்டது. அருகிவரும் வலசை பறவையினமான கருவால் மூக்கன் 450 என்ற எண்ணிக்கையில் குப்பைக்குறிச்சி குளத்தில் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டுகளின் மூலம் நீரை பெறும் குளங்களில் அதிகளவில் பறவைகள் காணப்படும். கடந்த டிசம்பர் மாத பெருவெள்ளத்தின்போது இப்பகுதியில் பெரும்பாலான குளங்கள் உடைந்ததால் பறவைகள் பெரிய அளவில் காணப்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டம் குப்பைக் குறிச்சி குளத்தில் அதிகபட்சமாக 2,005 பறவை களும், விஜய நாராயணம் குளத்தில் 1,094, விஜய அச்சம்பாடு குளத்தில் 1,037, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் குளத்தில் 1,050 பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்கைகொண்டான், டவுன் நயினார்குளம், ராஜவல்லிபுரம் குளம் மற்றும் தென்காசி மாவட்டம் வாகைகுளம், ராஜகோபாலபேரி குளங்களில் பறவைகள் கூடுகட்டி இனப் பெருக்கம் செய்தது பதிவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் புள்ளிமூக்குதாரா 20 குஞ்சுகளுடனும், நாமக்கோழி பறவை 3 குஞ்சுகளுடனும் காணப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT