Published : 27 Feb 2024 09:00 AM
Last Updated : 27 Feb 2024 09:00 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 18-வது வார்டு பகுதியில் திறந்த வெளியில் வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
ஓசூர் மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட மூக்காண்டப்பள்ளியில் நேதாஜி நகர், பொதிகை நகர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளையொட்டி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
தேங்கும் கழிவுநீர்: இத்தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி நிலங்களில் வெளியேற்றப் படுகிறது. இந்நிலத்தில் தேங்கும் கழிவு நீரால், இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் மாறி மாசடைந்துள்ளது. இதனால், இத்தண்ணீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொதிகை நகர் மற்றும் நேதாஜி நகர் குடியிருப்புப் பகுதியை யொட்டியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மேலும், தெரு விளக்கு, சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், தொழிற்சாலை களிலிருந்து கழிவு நீரை வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும். நகராட்சி சார்பில் எங்கள் பகுதிக்கு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வும்... தடையும்: இது தொடர்பாக அப்பகுதி மாமன்ற உறுப்பினர் சசி தேவ் கூறியதாவது:எனது வார்டில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. அண்மையில் மாநகராட்சி ஆழ்துளைக் கிணற்று நீரை ஆய்வு செய்தபோது, மாசடைந்திருப்பது தெரிந்து ஒரு கிணற்றைப் பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மேலும்,தெரு விளக்கு பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இது தொடர்பாக மாநகராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT