Published : 10 Feb 2018 11:30 AM
Last Updated : 10 Feb 2018 11:30 AM
உயிரினங்கள் காதலிக்குமா? இந்தக் கேள்வியும் சந்தேகமும் அர்த்தமற்றவை. சமூக விலங்காகிவிட்ட நம்மில் சிலர் வேண்டுமானால் காதலிக்காமல் இருக்கலாம். காதலுக்காக உயிரினங்களின் மெனக்கெடல்கள் கணக்கற்றவை.
தனது ஜோடி உயிரினத்தைக் கண்டறிவதற்காக உயிரினங்கள் ஆடுகின்றன, பாடுகின்றன, ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டுகின்றன, காதல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. அடக்கமான, மூர்க்கமான, இப்படி ஏதோ ஒரு வகையிலான காதல் வெளிப்படுத்தல் இல்லையென்றால் உயிரினங்களின் அடுத்த சந்ததி உருவாகாது.
தனக்கான கச்சிதமான இணையைத் தேடவும் அதைத் தனதாக்கிக் கொள்ளவும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் இயங்குகின்றன. இதெல்லாமே இனப்பெருக்க வெளிப்பாடு (courtship display) எனப்படுகிறது. உயிரினங்கள் இப்படித் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் அம்சங்கள் ஒவ்வொன்றுமே அவற்றின் ஆரோக்கியத்தையும் உடல் வலுவையும் வெளிப்படுத்தக்கூடியவை. தன்னால் சிறப்பாக இரைதேட முடியும், வாரிசுகளுக்கு உணவளிக்க முடியும் என்பதை முன்கூட்டியே நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பு.
அதேநேரம் மனித இனத்தில் கற்பிக்கப்பட்டுள்ளதற்கு மாறாக பெரும்பாலான உயிரினங்களில் பெண்களே தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுக்கின்றன, ஆண்கள் அல்ல. தற்போது முழுக்கவும் வணிகமயமான காதல் வெளிப்படுத்தல் சார்ந்தும் மனிதர்கள் மாறிவிட்டார்கள். நல்லவேளையாக ஆறாவது அறிவைப் பெறாத உயிரினங்கள் இன்னும் தங்கள் ஆதிக் காதலைத் தொலைக்காமல் இருக்கின்றன.
உயிரினங்கள் உலகில் கொட்டிக் கிடக்கும் காதல் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில மட்டும்:
பூநாரைகளின் வியத்தகு நடனம்
ஆண்டுதோறும் தான்சானியாவின் போகோரியா ஏரியில் ஆயிரக்கணக்கான பூநாரைகள் கூடி நடத்தும் நடனம் உலகப் புகழ்பெற்றது. உலகில் ஏதாவது ஓர் உயிரினம் தங்கள் இணையைத் தேடுவதற்கு பெரும் எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுகிறது என்றால், அது இங்கேதான்.
சமூகப் பறவைகளான பூநாரைகள் பெரும் கூட்டமாகவே வாழ்கின்றன. ஏரியில் தரையிறங்கும் பூநாரைகள் நடனமாடிக்கொண்டே ராணுவ அணிவகுப்பைப் போல நகர்த்துச் செல்லும். இப்படிச் செய்யும்போது ஒவ்வொரு பூநாரையும் எதிரே உள்ள பூநாரைகளின் இறக்கைகளை கவனமாக உற்றுப் பார்க்கும்.
பூநாரைகளின் கண் நிறமும் பிரகாசமான இறக்கைகளுமே சிறந்த ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் அடிப்படையில் எந்த ஜோடி தனக்குச் சரியாக இருக்கும் என்பதை பூநாரைகள் முடிவு செய்கின்றன. இணை முடிவான பின், பெரும்பாலும் அந்த ஜோடி வாழ்க்கை முழுக்கப் பிரிவதில்லை.
சில நேரம் தனது ஜோடியைத் தேடுவதற்கு ஆண், பெண் பூநாரைகள் தனித்தனி குழுக்களாக அணிவகுத்து நடனம் ஆடுவதும் உண்டு. இதில் ஒவ்வொரு பூநாரையும் தனது ஜோடிப் பூநாரையை திருப்திப்படுத்துவதற்கு முனையாமல், ஒரு குழு மற்றொரு குழுவை திருப்திப்படுத்துவது போலவே ஆடுவதும் உண்டு.
கொரில்லாவின் காதல் விளையாட்டு
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மலை கொரில்லாக்களில் குழுவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆண் குரங்கு 'வெள்ளிமுதுகு' என்று அழைக்கப்படும். இந்த ஆண் குரங்கு குழுவில் உள்ள பெண் குரங்குகள், குட்டிகளுக்குப் பாதுகாப்பை வழங்கும். மனித அப்பாக்களைப் போலில்லாமல் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல், விளையாட்டுத் தோழனாக இருப்பது மட்டுமில்லாமல், வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பதிலும் சிறந்த முன்மாதிரியாக இவை திகழுகின்றன.
அதேநேரம் இளம் பெண் கொரில்லாக்கள் இந்த வெள்ளிமுதுகைக் கவர நினைக்கும். அது கருவுறத் தயாரான நிலையில் முதலில் வெள்ளிமுதுகைப் பார்த்துச் சிரிக்கும், அண்ணல் நோக்குவதற்காகக் காத்திருந்து தானும் கண்ணோடு கண் நோக்கும்.
இதற்கெல்லாம் வெள்ளிமுதுகு அசைந்து கொடுக்காதபோது முதிர்ச்சி அடையாத இரண்டு இளம் ஆண் குரங்குகளைச் சுமந்துகொண்டு அந்த பெண் கொரில்லா செல்லும். அதன் பிறகும் வெள்ளிமுதுகு பேசாமல் இருக்காது.
மனிதர்களைப் போன்ற போனபோ
போனபோ குரங்குகள் மனிதர்களைப் போலவே தன் பிரியத்தை வெளிப்படுத்த இணையைக் கட்டிப்பிடித்துக்கொள்ளுமாம், முத்தமும் கொடுக்குமாம்.
அது மட்டுமில்லாமல் ஒரு போனபோ மற்றொரு போனபோவை அலங்கரித்து அழகு பார்க்கவும் செய்கிறது.
பெயரே காதல் சொல்லும்
காதல் பறவைகள் இல்லாமல் காதல் உயிரினங்கள் பட்டியலைத் தயாரிக்க முடியுமா? இந்தப் பறவைகள் ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பிரியாது. அதிலும் இவை சின்னதாக இருக்கும்போதே காதல் துளிர்த்துவிடும். இரண்டு மாதக் குஞ்சுகளாக இருக்கும்போதிலிருந்து காதல் நடைமுறைகளைத் தொடங்கிவிடுகின்றன. பெண் காதல் பறவை தன் இறக்கையை சிலிர்த்துக் காட்டும்.
அதற்கு பதிலாக வணக்கம் சொல்வதுபோல ஆண் காதல் பறவை தலையை மேலும் கீழும் இறக்கி நடனம் ஆடும்.
இதெல்லாம் மட்டுமில்லாமல் ஜோடி சேர்ந்த பிறகும், இவை அடிக்கடி செல்லமாகக் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
புது நிறம் காட்டும் கடல் குதிரைகள்
கடலில் வாழும் சிற்றுயிர்களில் கடல்குதிரைகள் விநோதமானவை. குதிரையைப் போன்ற தலையைக் கொண்டிருந்தாலும், இவற்றுக்குக் கால்கள் கிடையாது. நீந்தியபடியே கடலில் வாழ்கின்றன. கடல்குதிரைகளின் விநோத இனப்பெருக்க முறை பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆண் கடல்குதிரையின் இனப்பெருக்கப் பையில் பெண் கடல்குதிரை முட்டைகளை இட்டுவிட்டு, இரை தேடப் புறப்பட்டுவிடும். ஆண் கடல்குதிரை முட்டையை அடைகாத்துப் பொரிக்க வைக்கும். ஆண் கடல்குதிரையின் பைக்கு முட்டைகளைக் கடத்திய பிறகு பெண் கடல் குதிரை ஒவ்வொரு நாள் காலையிலும் வந்து பார்க்கும்.
இதைவிடவும் கடல்குதிரைகளின் காதல் விளையாட்டுகள் சுவாரசியம் நிறைந்தவை. ஜோடிகள் வால்களைப் பிணைத்துக்கொள்ளும், மூக்கோடு மூக்கு உரசும், உடல் நிறத்தை மாற்றிக் காண்பிக்கும். இந்த விளையாட்டுகள் இணைசேரும்போது மட்டுமில்லாமல், அடைகாக்கும் பருவத்திலும் ஏன் முட்டை பொரிக்கும்வரை தொடருமாம். இந்த நடைமுறை ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரைகூட நடக்கும்.
பெண்ணைப் பராமரிக்கும் இருவாச்சி
இருவாச்சிகள் சற்றே விநோதமான பறவைகள். இவற்றில் ஆண்-பெண் பறவைகள் இடையிலான பிணைப்பு மிக முக்கியமானது. இரண்டும் இனப்பெருக்கப் பாடலைப் பாடிய பிறகு, பெருமரம் ஒன்றின் பொந்தில் அடைக்கலம் புகும். பெண் இருவாச்சி முட்டையிட்ட பிறகு பொந்தில் அலகு மட்டும் வெளியே தெரியும் வகையில் விட்டுவிட்டு, பொந்தின் வெளிப்பகுதியை மூடிவிடும்.
ஆண் பறவை இரை தேடிக் கொண்டுவந்து கொடுக்கும். குஞ்சு பொரிந்த பிறகும் சில மாதங்களுக்கு பெண்ணுக்கும் குஞ்சுகளுக்கும் ஆண் பறவை இரைதேடிக் கொண்டுவரும். பிறகு குஞ்சுகளை பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு பெற்றோர் பறவைகள் ஒன்று மாற்றி மற்றொன்று இரை தேடிக் கொண்டுவரும்.
சுயமாகத் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை வந்தவுடன் குஞ்சுகளே கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT